தன் ஊழியர்களுக்குக் கோமாளிபோல் ஆடை அணிவித்து, தொடக்கப் பள்ளிகளுக்கு வெளியே நடமாடச் செய்த நிறுவனத்தின் செயல் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது.
இதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனம் மன்னிப்பு கோரியது.
மரீன் பரேட்டில் டவ் நான் பள்ளிக்கு வெளியே இப்படிக் கோமாளிபோல் வேடமிட்ட ஒருவர் காணப்பட்டதை அடுத்து, அத்தகைய கோமாளிகளைத் தங்களின் பிள்ளைகள் பின்தொடராமல் பார்த்துக்கொள்ளும்படி அந்தத் தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர்களுக்கு விழிப்பூட்டினார்.
'ஸ்பீச் அகாடமி ஏஷியா' என்ற செறிவூட்டு நடவடிக்கை மையத்தின் பேச்சுத்திறன் வகுப்புகள் குறித்து விளம்பரப்படுத்துவதற்காக, கடந்த இரு வாரங்களாகத் தனது சந்தைப்படுத்தல் குழுவினரைச் சிங்கப்பூரின் கிழக்கு, மேற்குப் பகுதிகளுக்கு அனுப்பியதாக அந்தக் கல்வி நிலையத்தின் இயக்குநர் கெல்வின் டான் கூறினார்.
மாணவர்கள் பொதுவிடங்களில் பேசும் திறனை வளர்த்துக்கொள்ள அந்தத் தனியார் கல்வி நிலையம் வழிகாட்டுகிறது.
"அதன் பின்னணியில் எந்தக் கெட்ட எண்ணமும் இல்லை. இனி அவ்வாறு செய்யமாட்டோம்," என்றார் திரு டான்.
கோமாளி வேடமிட்டவர்கள் தங்களைப் பின்தொடரும்படி மாணவர்களிடம் கூறியதாகச் சொல்லப்படுவதை மறுத்த திரு டான், "எங்கள் ஊழியர்கள் அப்படி ஒருபோதும் கூறமாட்டார்கள்," என்றார்.
கோமாளி உடையுடன் பிடோக் சௌத்தில் காணப்பட்ட ஒரு படத்தை திங்கட்கிழமை (செப்டம்பர் 20) தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றம் செய்த நாடாளுமன்ற நாயகர் டான் சுவான் ஜின், "இது ஒரு விளம்பர உத்தியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். இந்த முட்டாள்தனத்தைச் செய்பவர் யாராக இருந்தாலும் அதை உடனே நிறுத்துங்கள்!" என்று சாடியிருந்தார்.
அத்துடன், "இதுகுறித்துக் காவல்துறை விசாரித்து வரும் என்று நம்புகிறேன். இது வேடிக்கையானது அல்ல, ஆபத்தானது," என்றும் திரு டான் பதிவிட்டு இருந்தார்.
மரீன் பரேட் குழுத்தொகுதி எம்.பி.யும் மனிதவள அமைச்சருமான டான் சீ லெங், தங்கள் பிள்ளைகளை விழிப்புடன் இருக்குமாறும் ஒருவேளை பெற்றோர்களுக்காகக் காத்திருக்க நேர்ந்தால் பள்ளித் திடலிலேயே இருக்குமாறும் தங்கள் பிள்ளைகளிடம் பெற்றோர்கள் நினைவூட்ட வேண்டும் என்றும் பெற்றோர்களுக்கு வலியுறுத்தி இருக்கிறார்.
மக்களைச் சென்றடையும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, 'அழகான உருவச்சின்னங்கள்' போன்று வேடமிடும்படி தங்களது சாலைக்காட்சிக் குழுவினர் கேட்டுக்கொள்ளப்பட்டதாகவும் ஆனால் அவர்கள் கோமாளிபோல் வேடமிட்டது குறித்து தான் அறிந்திருக்கவில்லை என்றும் திரு கெல்வின் சொன்னார்.
"ஒருவேளை அந்தக் கோமாளிகள் அச்சம் தரும் விதமாக இருந்திருக்கலாம். அது தவறு. இனி அப்படிச் செய்ய மாட்டோம்," என்றார் அவர்.
காத்தோங், தெம்பனிஸ் போன்ற பல பகுதிகளில் கடந்த வாரம் அத்தகைய கோமாளிகள் காணப்பட்டதாகச் சமூக ஊடகப் பதிவுகள் தெரிவிக்கின்றன.
அங்சானா தொடக்கப் பள்ளியில் பயிலும் தன் மகளை இம்மாதம் 15ஆம் தேதி பள்ளி முடிந்தபின் அழைத்துச் சென்றபோது, ஏன் ஒரு மனிதர் கோமாளி போன்று உடையணிந்து இருக்கிறார் என்பதை அறிய மிகுந்த ஆர்வம் காட்டியதாக திருவாட்டி ஷாவலட்டி, 36, என்பவர் கூறினார்.
தெம்பனிஸ் ஸ்திரீட் 22ல் அமைந்துள்ள அப்பள்ளிக்கு வெளியே நின்றிருந்த அந்தக் 'கோமாளி' மனிதர், மலாய் மொழியில் பேசியதாகவும் தம் மகளைப் பேச்சுத்திறன் வகுப்பிற்குப் பதிவுசெய்யும்படி தம்மிடம் கேட்டுக்கொண்டதாகவும் அவர் சொன்னார்.
"அது ஒரு விளம்பர உத்தி என்பதால், அது தனித்துத் தெரிய வேண்டியது முக்கியம் என்றெண்ணுவது விளங்குகிறது. எல்லாருடைய கண்களும் அவர்மீதே இருந்தன. ஆனால், அவர் உடை அணிந்திருந்த விதம் ஒரு சிவப்பு எச்சரிக்கைபோல அமைந்துவிட்டது.
அது குழந்தைகளை அச்சப்படுத்தலாம்," என்று சொன்னார் விமான நிலையத்தில் பணிபுரியும் திருவாட்டி ஷாவலட்டி.
கோமாளிபோல் வேடமிட்ட மனிதர்கள், பல்வேறு தொடக்கப் பள்ளிகளில் குழந்தைகளை அணுகியது தொடர்பில் குறித்துப் பல புகார்கள் வந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
"முன்பின் அறியாதவர்களிடம் இருந்து விலகி இருக்கும்படியும் சந்தேகப் பேர்வழிகள் அல்லது நடவடிக்கைகளைக் கண்டால் காவல்துறையிடம் புகார் அளிக்கும்படியும் பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றனர்," என்று காவல்துறைப் பேச்சாளர் தெரிவித்து இருக்கிறார்.
காவல்துறை விசாரணை தொடர்கிறது.

