சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்று கூடி வருகிறது. இந்தச் சூழ்நிலையில் முதியோரைப் பொறுத்தவரை வாழ்வா, சாவா என்பதைத் தீர்மானிப்பது தடுப்பூசிதான் என்று வல்லுநர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.
தாதிமை இல்லங்களில் மேலும் தொற்றுக் குழுமங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக சுகாதாரத் துறையைச் சேர்ந்த அந்த வல்லுநர்கள் எச்சரிக்கிறார்கள். அத்தகைய விடுதிகளில் முதியவர்கள் அணுக்கமாகச் சேர்ந்து வாழ்வதை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
தேசிய பல்கலைக்கழக மருத்துவமனையின் தொற்றுநோய் மூத்த ஆலோசகர் பேராசிரியர் டேல் ஃபிஷர், தாதிமை இல்லங்களில் இன்னமும் தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருப்போரை உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி அவர்களுடைய உறவினர்கள் வலியுறுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
கொவிட்-19 தொற்றினால் முதியோருக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு மிகக் கடுமையாக இருக்கும் என்பதை அவர் சுட்டினார். சமூகத்தில் தொற்று அதிகரித்து வருவதை வைத்துப் பார்க்கையில், முதியோரிடையே தொற்று வேகமாக பரவக்கூடும் என்பதால் தாதிமை விடுதிகளை மிகவும் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான முயற்சிகளை முடுக்கிவிட வேண்டி இருக்கும் என்று அவர் கருத்துரைத்தார்.
தொற்று பரவுவதைக் குறைக்கும் வகையில் முதியோர் பராமரிப்பு விடுதிகளுக்கான வருகை கள் அக்டோபர் 11ஆம் தேதி வரை நிறுத்தி வைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு இந்த மாத தொடக்கத்தில் அறிவித்திருந்தது.
தொற்றுநோய்த் துறை வல்லுநரான லியோங் ஹோ நாம், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் உடனடியாக முற்றிலும் தடுப்பூசி யைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதனால் அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதோடு மட்டுமின்றி, சுகாதாரப் பராமரிப்பு முறைக்குச் சுமை கூடுவதைக் குறைக்கலாம் என்று டாக்டர் லியோங் குறிப்பிட்டார்.
முதியோர் பராமரிப்பு நிலையங்களில் தங்கி இருப்போர், ஊழியர்களில் 100க்கும் மேற்பட்டோருக்குத் தொற்று ஏற்பட்டதை அடுத்து தாதிமை விடுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கிவிடப்பட்டு உள்ளன.

