புதுவகை சமூகப் பராமரிப்பு நிலையங்கள் அமைகின்றன
உடல்நலத்துடன் ஆனாலும் அணுக்கமாக கண்காணிக்க வேண்டிய தேவையுடன் இருக்கின்ற கொவிட்-19 நோயாளிகளுக்காக புதிய வகை சமூகப் பராமரிப்பு வசதிகள் அமைக்கப்படும்.
மருத்துவமனைகளுக்கு அளவுக்கு அதிக சுமை ஏற்படுவதைக் குறைக்கும் நோக்கத்துடன் இது நடைமுறைக்கு வருகிறது என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய வசதிகளை உருவாக்கு வதால் சிறப்பு மருத்துவ சிகிச்சைத் தேவைப்படுவோருக்கு மட்டும் மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க வசதி ஏற்படும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இத்தகைய முதலாவது சமூகப் பராமரிப்பு வசதி தெம்பனிசில் இருக்கும் என்டியுசி ஹெல்த் நிறுவனத்தின் தாதிமை விடுதியில் அமையும். அது 250 படுக்கைகளுடன் வியாழக்கிழமை செயல்படத் தொடங்கும்.
லேசான அறிகுறிகளுடன் கூடிய நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கின்ற சமூகப் பராமரிப்பு நிலையங்கள் தங்களிடம் உள்ள படுக்கைகளின் ஒரு பகுதியை இத்தகைய கொவிட்-19 நோயாளிகளுக்காக ஒதுக்கும்.
உடல்நிலை சீராக இருக்கின்ற, லேசான அறிகுறிகளுடன் கூடிய, அதேவேளையில், இதய, நரம்பு சுவாச நோய்களால் பாதிக்கப்பட்ட முதியவர்களுக்கு அத்தகைய புதிய வகை நிலையங்கள் சிகிச்சை வழங்கும்.
அத்தகைய நிலையங்களில் மிகவும் பரந்த அளவிலான மருத்துவ பாதுகாப்பை நோயாளிகள் பெறுவார்கள் என்றும் அவற்றில் அதிகமான மருத்துவ, தாதிமை ஊழியர்கள் இருப்பார்கள் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.
கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள தாதிமை விடுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு அவர்கள் அந்த நிலையங்களில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். யாருக்காவது நிலைமை மோசமானால் அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்படுவார்கள்.
தொடர்ந்து 2வது நாளாக தொற்று எண்ணிக்கை 1,000க்கும் அதிகம்
சிங்கப்பூரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக கொவிட்-19 தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 1,000ஐ தாண்டியுள்ளதாக சுகாதார அமைச்சு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 19) தெரிவித்தது.
ஞாயிற்றுக்கிழமை புதிதாக 1,012 பேருக்குத் தொற்று உறுதியானது. கடந்த ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதிக்குப் பிறகு பதிவாகியுள்ள ஆக அதிக ஒருநாள் தொற்று இது.
உள்ளூரில் கிருமித்தொற்றுக்கு ஆளானவர்களில் சமூக அளவில் 919 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதி களில் 90 பேரும் அடங்குவர். அவர்களில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 321 பேர்.
வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த மூவருக்கும் தொற்று உறுதியானது. மருத்துவமனைகளில் இப்போது 873 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தின நிலவரப்படி இந்த எண்ணிக்கை 863 ஆக இருந்தது.
மருத்துவமனைகளில் 118 பேருக்கு செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. முன்னதாக இந்த எண்ணிக்கை 105 ஆக இருந்தது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 21 பேர் கவலைக்கிடமாக உள்ளனர். நேற்று முன்தின நிலவரப்படி இந்த எண்ணிக்கை 18 ஆக இருந்தது. கடுமையாக நோய்வாய்ப்பட்டவர்களில் 116 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்.

