எஸ்-பாஸ் மற்றும் வேலை அனுமதிச் சீட்டு வைத்துள்ள வெளிநாட்டு ஊழியர்கள் கொவிட்-19 தொற்று காரணமாக தனிமையில் இருக்கும் காலத்திற்கு அவர்களுக்கான தீர்வையை முதலாளிகள் செலுத்த வேண்டாம் என்று அரசாங்கம் சலுகை அளித்துள்ளது.
அந்தச் சலுகைக் காலம் இந்த மாதத்துடன் முடிவடைய இருந்தது.
அத்தகைய ஊழியர்களின் முதலாளிகள் அந்தச் சலுகையை இந்த ஆண்டு இறுதி வரை பெறலாம் என்று இப்போது அரசாங்கம் அறிவித்துள்ளது.
முதலாளிகள் ஊழியர்களைப் பாதுகாப்பாக அழைத்து வரவும் நிலைமைக்கு ஏற்ப தங்களைச் சரிசெய்துகொள்ள மேலும் கால அவகாசம் அளிக்கவும் ஊழியர்கள் தனிமையில் இருப்பதால் ஏற்படகூடிய செலவுகளைச் சமாளிக்கவும் உதவும் நோக்கத்தில் இந்தச் சலுகை மேலும் நீட்டிக்கப்படுகிறது என்று மனித வள அமைச்சர் டான் சீ லேங் தெரிவித்துள்ளார்.
வர்ததக தொழில் இரண்டாம் அமைச்சருமான டாக்டர் டான், கொவிட்-19 காரணமாக படுமோசமாக பாதிக்கப்பட்டுள்ள கட்டுமானத் துறைக்கு உதவுவதும் இதன் நோக்கம் என்று கூறினார்.
தீர்வை தள்ளுபடி சலுகை வீட்டு வேலை பணிப்பெண்களுக்கும் பொருந்தும்.
அமைச்சர் டாக்டர் டான், நேற்று சிங்கப்பூர் நிலச்சொத்து மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் நிகழ்ச்சி ஒன்றில் பேசினார். கட்டுமானத் துறை எதிர்நோக்கும் கடுமையான மனிதவளப் பற்றாக்குறை பற்றியும் அதைச் சமாளிக்க நிறுவனங்களுக்கு அரசாங்கம் அளிக்கும் ஆதரவு, உதவிகள் குறித்தும் அவர் விளக்கினார்.
வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை தள்ளுபடி, கழிவுகள் ஒரு புறம் இருக்க, வேலை ஆதரவுத் திட்டம் மூலமாகவும் $1.36 பில்லியன் கட்டுமானத்துறை ஆதரவு திட்டம் வழியாகவும் நிறுவனங்கள் பலன் பெற முடியும்.
புதிய தங்குவிடுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு வசிப்பிட சூழல் மேம்பட்டு இருக்கிறது என்பதை அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
கட்டுமானத்துறை மேலும் மீள்திறனுடன் திகழ வேண்டுமானால் மின்னிலக்கமயம், தானியக்கமயம் மூலம் அந்தத் துறை உற்பத்தித்திறனைப் பெருக்க வேண்டும்.
அதோடு மட்டுமின்றி, சிங்கப்பூரர்களை ஆதாரமாகக் கொண்ட ஊழியர் அணியைப் பலப்படுத்த வேண்டும் என்றும் டாக்டர் டான் வலியுறுத்தினார்.
வாழ்க்கைத் தொழிலின் நடுவில் வேறு துறைக்கு மாறி வேலை பெற முயலும் சிங்கப்பூரர்களை வேலையில் சேர்க்க நிறுவனங்கள் பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

