கடந்த பிப்ரவரி மாதம் துவாஸ் தொழில்துறைக் கட்டடத்தில் நேர்ந்த வெடிப்புச் சம்பவம், முன்னதாகத் தீப்பிடித்திருந்த ஓர் இயந்திரத்துடன் தொடர்புடையது எனத் தெரியவந்துள்ளது. உடலின் 90 விழுக்காட்டுப் பகுதியில் மோசமான தீக்காயங்கள் ஏற்பட்டு மூவர் மாண்டனர். வெடிப்பு பயங்கரமாக இருந்ததால் கட்டடத்தின் சன்னல்கள் நொறுங்கி வீசியெறியப்பட்டன, சுவர் ஒன்று இடிந்து விழுந்தது, மற்றொரு சுவரில் பெரிய துவாரம் உருவானது.
மாண்டோரில் ஒருவரான 38 வயது திரு சுப்பையன் மாரிமுத்து, சம்பந்தப்பட்ட இயந்திரத்தின் மேல் இருந்த பழுதான கருவியைப் படமெடுத்து பொறியாளர் ஒருவருக்கு அனுப்பியிருக்கிறார். ஆனால் விபத்துக்குப் பிறகு திரு லுவின் மோ துன் என்ற பொறியாளர் அந்தப் படத்தைத் தனது கைபேசியிலிருந்தும் திரு சுப்பையனின் கைபேசியிலிருந்தும் அழித்திருக்கிறார் என்பது நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
மாண்ட மூன்று 'ஸ்டார்ஸ் எஞ்சினியரிங்' நிறுவனத்தின் ஊழியர்களும் இந்தியா, பங்ளாதேஷ் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். நீதிமன்ற விசாரணை தொடங்கும்போது அவர்களுக்காக ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு மூத்த மாவட்ட நீதிபதி ஓங் ஹியான் சுன் கேட்டுக்கொண்டார். சிங்கப்பூருக்கு அவர்கள் ஆற்றிய பங்கிற்கு நன்றி கூறிய நீதிபதி ஓங், அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டார்.
32ஈ துவாஸ் அவென்யூ 11ல் உள்ள கட்டடத்தில் கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று காலை சுமார் 11.20 மணிக்கு விபத்து நேர்ந்தது.
அப்போது கட்டடத்தின் முதல் மாடியில் நடத்தப்பட்ட பயிலரங்கில் மாண்ட மூவரும் இருந்திருக்கின்றனர்.
மொத்தம் 10 பேர் காயமுற்றனர். அவர்களில் ஐவர் 'ஸ்டார்ஸ் எஞ்சினியரிங்' நிறுவனத்தின் ஊழியர்கள்.
கட்டடத்தில் இருந்த சம்பந்தப்பட்ட இயந்திரத்தைப் பற்றி அரசு தரப்பு வழக்கறிஞர் கிறிஸ்டி டான் விசாரணையில் விவரித்தார். அந்த இயந்திரம் அலிபாபா மின்வர்த்தகத் தளத்திலிருந்து 2019ஆம் ஆண்டு வாங்கப்பட்டது.
எண்ணெய்யைச் சூடாக்க இயந்திரத்தில் ஒன்பது 'ஹீட்டர்' எனப்படும் சூடாக்கும் கருவிகள் இருந்திருக்கின்றன.
'ஸ்டார்ஸ் எஞ்சினியரிங்' அவற்றுக்குப் போதுமான எண்ணெய்யைப் போடாமல் இருந்திருக்கலாம் எனத் தெரியவந்தது.
இயந்திரம் சென்ற ஆண்டு ஜூன் மாதம் சோதனையிடப்பட்டது. சென்ற ஆண்டு அக்டோபர் மாதத்தில்தான் அது முழுமையாகப் பயன்படுத்தப்பட்டது.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் எட்டாம் தேதியன்று இயந்திரம் பயன்படுத்தப்பட்டபோது சூடாக்கும் கருவி தீப்பொறியையும் புகையையும் வெளியிட்டிருக்கிறது. 'ஸ்டார்ஸ் எஞ்சினியரிங்' நிறுவனத்தின் முன்னாள் ஊழியரான திரு இமாம், இயந்திரத்தில் எண்ணெய்யின் அளவு குறைந்ததாகவும் எறிந்துபோனதால் சூடாக்கும் கம்பிகளில் ஒன்று வளைந்துபோனதாகவும் குறிப்பிட்டார்.
ஆகஸ்ட் 28ஆம் தேதியன்று இயந்திரத்திலிருந்து மீண்டும் புகை வெளிவந்ததாகத் திரு இமாம் தெரிவித்தார்.
சென்ற ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் தேதியன்றும் இயந்திரத்திலிருந்து புகை வெளிவந்திருக்கிறது.
அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு இயந்திரத்தின் முன்பகுதியிலிருந்து கசிவு ஏற்பட்டதை ஊழியர்கள் கவனித்திருக்கின்றனர். ஆனால் அது உடனடியாகச் சரிசெய்யப்படவில்லை.
இச்சம்பவங்களுக்குப் பிறகும் இவ்வாண்டு ஜனவரி மாதம் வரை இயந்திரத்தில் கோளாறுகள் ஏற்பட்டிருக்கின்றன. பிப்ரவரி மாதம் விபத்து நேர்ந்தது.
இந்த விபத்து நேர்ந்திருக்கவே கூடாது என்றும் மறுபடியும் இதுபோன்ற சம்பவம் நிகழக்கூடாது என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் திருவாட்டி டான் கூறினார்.

