இடம்மாறும் கணக்காய்வு
ஒழுங்குமுறை ஆணையம்
கணக்காய்வு ஒழுங்குமுறை ஆணையம் அடுத்த மாதம் 18ஆம் தேதியன்று 'ரெவன்யூ ஹவுஸ்' கட்டடத்திற்கு இடம் மாறவுள்ளது. தற்போது ஆணையம், ஆன்சன் சாலையில் உள்ள 'இன்டர்நேஷனல் பிளாசா' கட்டடத்தில் இயங்குகிறது.ஆணையத்தின் புதிய முகவரி 55 நியூட்டன் சாலை, கதவு எண் 03-02 'ரெவன்யூ ஹவுஸ்', சிங்கப்பூர் 307987. கணக்காய்வு ஒழுங்குமுறை ஆணையம், நிதி அமைச்சின்கீழ் இயங்கும் ஆணைபெற்ற நிறுவனம். வர்த்தகங்கள், பொதுக் கணக்காளர்கள் உள்ளிட்டவற்றுக்கு இடையிலான செயல்முறைகளை ஆணையம் கண்காணித்து நிர்வகிக்கிறது.
வாரந்தோறும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 8.30லிருந்து மாலை ஆறு மணிவரை 62486026 என்ற எண்ணில் ஆணையத்தைத் தொடர்புகொள்ளலாம்.
'கிளி வளர்ப்பதில் கூடுதல்
விதிமுறைகள் வேண்டும்'
சிங்கப்பூரில் அதிகமானோர் கிளிகளை வளர்த்து வருகின்றனர். புத்திசாலிப் பறவைகளாகப் பார்க்கப்படும் இவற்றை வேட்டையாடுவதன் தொடர்பில் இருக்கக்கூடிய நெருக்குதல்களைக் குறைக்க கிளிகளை வளர்ப்போரின் விருப்பங்களை இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும் என்றும் உள்ளூர் கிளி விற்பனைத் துறையில் விதிமுறைகளை வலுப்படுத்தவேண்டும் என்றும் ஓர் ஆய்வாளர் குழு கூறியுள்ளது.
கிளிகள் எங்கிருந்து தருவிக்கப்படுகின்றன போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படுவதைக் கட்டாயமாக்குவது, கிளிகளின் சுகாதார விவரங்களைத் தெரிந்துகொள்வது போன்றவற்றின் தொடர்பில் விதிமுறைகளை உருவாக்கலாம் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
தற்போது உலகில் 403 கிளி வகைகள் உள்ளன. செல்லப் பிராணிகளாக வளர்க்க மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளால் அவற்றில் 143 வகைகள் அபாயத்தில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவசர சிகிச்சைப் பிரிவுக்குச்
செல்லும் காரணத்தை அறிய முயற்சி
ஈராண்டுகளுக்கு முன் கூ டெக் புவாட் மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு 12 முறை சென்றோர் இந்த ஆண்டு ஒரு முறைகூட அங்குச் செல்லவிவ்லை. சிலர் அடிக்கடி அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணங்களை அறிந்துகொள்ள மேற்கொள்ளப்படும் திட்டம் ஒன்று இதைச் சாத்தியப்படுத்தியுள்ளது.
கூ டெக் புவாட் மருத்துவமனையை நிர்வகிக்கும் 'ஈஷூன் ஹெல்த்' சுகாதாரக் குழுமம் இத்திட்டத்தை நடத்துகிறது. 2019ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட திட்டத்தில் தற்போது 26 பேர் பங்கேற்கின்றனர். திட்டத்தில் பங்கேற்ற பிறகு இவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வது பாதிக்கும் மேல் குறைந்தது. இவர்களில் ஐவர் பிரிவுக்குச் செல்வதை அறவே நிறுத்திவிட்டனர்.
சிலர் அடிக்கடி அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் செல்வதற்குப் பின்னால் இருக்கக்கூடிய சில காரணங்கள் திட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளன. அவசர சிகிச்சைப் பிரிவு எந்நேரமும் திறந்திருப்பது, சாதாரண சுகாதாரப் பிரச்சினைகள் மோசமானவையாக இருக்கக்கூடும் எனத் தவறாக அஞ்சுவது போன்றவை அவை.

