முன்னாள் தேசிய காற்பந்து வீரரான முகமது நோ ஹுசேன் மாரடைப்பால் நேற்று காலமானார். அவருக்கு வயது 67.
1979களில் சிங்கப்பூரர்களிடையே பிரபலமாக இருந்த இவர் செங்காங் பொது மருத்துவமனையில் கவலைக்கிடமாக இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
மாட் நோ எனச் செல்லமாக அழைக்கப்பட்ட இவர், 1977ஆம் ஆண்டில் மலேசிய கிண்ணத்தைக் கைப்பற்றிய சிங்கப்பூர் அணியில் இடம்பெற்றார்.
தமது சிறப்பான விளையாட்டால் கண்கவர் பலரைக் கவர்ந்தவர் மாட் நோ.
1977ஆம் ஆண்டில் ஆசியாவின் ஆகச் சிறந்த அணிகளில் ஒன்றாக மலேசியா கருதப்பட்டது. அந்த ஆண்டு மார்ச் மாதம் ஆறாம் தேதியன்று காலாங் விளையாட்டரங்கில் நடைபெற்ற உலகக் கிண்ணத் தகுதி ஆட்டத்தில் அப்படிப்பட்ட மலேசிய அணிக்கு எதிராக பெனால்டி மூலம் வெற்றி கோலை அடித்தார் மாட் நோ. அந்த அருமையான தருணத்தை நினைவுகூர்ந்து ஃபேஸ்புக் பதிவில் அவரைக் கௌரவித்தது சிங்கப்பூர் காற்பந்துச் சங்கம். மாட் நோவின் குடும்பத்தாருக்கும் அவருக்கு நெருக்கமானவர்களுக்கும் சங்கம் அதன் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொண்டது. 1988ல் மாட் நோ பிரபல உள்ளூர் பாடகியான ரஹிமா ரஹிமை மணமுடித்தார்.
ஆனால் 11 ஆண்டுகளுக்குப் பின் இருவரும் விவாகரத்து பெற்றுக்கொண்டனர்.
1981ஆம் ஆண்டுக்குப் பிறகு மாட் நோ காற்பந்திலிருந்து விலகத் தொடங்கினார்.
முன்னாள் தேசிய காற்பந்துப் பிரபலமான டேரி என்றழைக்கப்படும் திரு பத்மநாதன் தம்பையா 1979 முதல் 1981ஆம் ஆண்டு வரை மாட் நோவுடன் சிங்கப்பூர் தேசிய குழுவில் விளையாடியவர்.
1980ஆம் ஆண்டில் மலேசியக் கிண்ணத்தை சிங்கப்பூர் வென்றபோது டேரியும் மாட் நோவும் ஓரே அணியில் இருந்தனர்.
"மாட் நோ திடலுக்கு வலது பக்கத்தில் தாக்குதல் ஆட்டக்காரராக சிறப்பாக விளையாடினார். எதிர் அணி அவரின் ஆட்டத்தைக் கட்டுப்படுத்த பெரும் முயற்சி எடுக்கவேண்டும்.
"பந்தைக் கட்டுக்குள் கொண்டு வரும் திறன், பந்துடன் ஓடும் திறன், வேகம், விளையாட்டு பாவனை என்று ஒரு காற்பந்து வீரருக்கான அனைத்துத் திறன்களையும் கொண்ட திறமையான ஆட்டக்காரராகத் திகழ்ந்தார்," என்று புகழாரம் சூட்டினார் 64 வயது டேரி.
காலஞ்சென்ற மாட் நோ இறை பக்தி கொண்டவராகவும் மென்மையான குணம் படைத்த மனிதராகவும் இருந்ததை நினைவுகூர்ந்தார் டேரி.
"பொதுவாகவே அமைதியாகவும் மற்றவர்களிடம் அன்பாக பழகும் குணம் உள்ளவராகவும் மாட் இருந்தாலும், விளையாட்டு என்று வரும்போது மாறுபட்ட நபராக மாறிவிடுவார். திடலில் நாம் என்ன செய்யவேண்டும் என்று பலத்த குரலில் தெரிவிப்பார்.
"புதிதாக வரும் ஆட்டக்காரர்களுக்கு நல்ல ஆலோசனைகளை வழங்கினார். அவர் விளையாடுவதைப் பார்க்க ஆயிரக்கணக்கானோர் வருவார்கள். இருந்தாலும் புகழை அவர் விரும்பியதில்லை. விளையாட்டிலேயே கவனத்தைச் செலுத்தினார்," என்றார் 'ஸ்போர்ட்ஸ் சிங்கப்பூர்' அமைப்பின் மூத்த நிர்வாகியான டேரி.

