வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட இன்னும் ஒன்பது நாட்கள் மட்டுமே இருந்தபோது 28 வயது திரு
விக்ரம் குமார் திவாரி தூக்கத்தில் இறந்தார்.
தமது தந்தை, உறவினர் ஆகியோரைப் போல தாமும் வழக்கறிஞராக வேண்டும் என்பது அவரது நீண்டநாள் கனவு என்று அவரது குடும்பத்தார் தெரிவித்தனர்.
இந்நிலையில், இறப்புக்குப் பிறகு அவர் வழக்கறிஞராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார்.
சிங்கப்பூரில் இவ்வாறு நடப்பது இதுவே முதல்முறை.
மகன் இறந்த சோகத்திலும் அவருக்குக் கிடைத்த இந்த அங்கீகாரம் மகிழ்ச்சியைத் தருவதாக திரு திவாரியின் தாயாரான 62 வயது திருமதி ரமோத்தி திவாரி கண்ணீர் மல்க ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் கூறினார்.
"திரு விக்ரம் திவாரி மேற்கொண்ட முயற்சிகளைக் கருத்தில் கொள்ளும்போது, அவரது விண்ணப்பத்தை ஏற்று அவரை வழக்
கறிஞராக அங்கீகரிப்பதே நியாய மாகும்," என்று உயர் நீதிமன்ற நீதிபதி சூ ஹான் டெக் தெரிவித்தார்.
அங்கீகரிக்கப்பட அனைத்துத் தகுதிகளையும் அவர் கொண்டிருந்தது மட்டுமல்லாது, வழக்கறிஞருக்கான கட்டணத்தைச் செலுத்த முடியாதோரைப் பிரதிநிதிக்க, வழக்கறிஞர் சங்கத்தின் குற்றவாளி சட்ட உதவித் திட்டத்தின்கீழ் முழுநேரமாகப் பணியாற்ற திரு விக்ரம் திவாரி விண்ணப்பம் செய்திருந்ததை நீதிபதி சுட்டினார்.
ஷெஃபீல்டு பல்கலைக்கழகத்தில் சட்டக் கல்வி பயின்ற திரு விக்ரம் திவாரி கடந்த மே மாதம் 30ஆம் தேதி அதிகாலை மாண்டார். அவருக்கு எவ்வித உடல்நிலைப் பிரச்சினையும் இல்லை என்று அவரது தந்தை திரு ராம் திவாரி கூறினார்.

