உரிமம் இல்லாது உடற்பிடிப்பு நிலையங்களை நடத்தியதாக ஆடவர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அந்த உடற்பிடிப்பு நிலையங்கள் பிரைட்டன் கிரெசண்ட், ஹவ்காங் ஸ்திரீட் 21, ஜாலான் புசார் ஆகிய இடங்களில் இருந்தன.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலிருந்து இவ்வாண்டு ஜூன் மாதம் வரை அங் மோ கியோ, மத்திய போலிஸ் பிரிவுகள் நடத்திய அதிரடி நடவடிக்கைகளில் இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. உரிமம் இல்லாமல் உடற்பிடிப்பு நிலையங்களை நடத்தியதாக 58 வயது ஃபூ ஹீ டோங் மீது குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது. ஒவ்வொரு குற்றச்சாட்டின்கீழ் அவருக்கு ஐந்தாண்டு வரை சிறைத் தண்டனை, $20,000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
ஃபூ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது குறித்து நிலையங்களுக்கான இடங்களை அவரிடம் வாடகைக்கு விட்டவரிடம் போலிசார் தகவல் தெரிவிப்பர்.
ஃபூக்குத் தண்டனை விதிக்கப்பட்டால் ஒரு மாதத்துக்குள் வாடகைக்கு விடப்பட்ட இடங்களை ஃபூவிடமிருந்து உரிமையாளர் திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டும். உரிமம் இல்லாமல் உடற்பிடிப்பு நடவடிக்கைகள் நடத்தப்படும் எனத் தெரிந்தே இடங்களை வாடகைக்கு விடும்
உரிமையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலிசார் தெரிவித்தனர்.

