தோ பாயோவில் சில இடங்கள் கொவிட்-19 குழுமங்களாக உருவெடுத்ததைத் தொடர்ந்து அங்கு இப்போது கூட்டம் அதிகம் காணப்படுவதில்லை. தோ பாயோ லோரோங் ஒன்று வீவக புளோக் 111ல் இருக்கும் 'சிங்கப்பூர் பூல்ஸ்' பந்தயப் பிடிப்புக் கூடம், தோ பாயோ பேருந்து நிறுத்தம் ஆகியவை தற்போது இங்குள்ள கொவிட்-19 கிருமித்தொற்று குழுமங்களில் சில. பேருந்து நிறுத்தத்தில் குறைந்தது 254 கொவிட்-19 சம்பவங்கள் உள்ளன. அதுதான் இந்தப் பேட்டையின் ஆகப் பெரிய குழுமம்.
தோ பாயோ லோரோங் எட்டில் உள்ள ஈரச் சந்தை, உணவங்காடி, லோரோங் ஏழில் உள்ள இரவு நேரக் காய்கறி ஒட்டுமொத்த விற்பனைச் சந்தை, தோ பாயோ நார்த்தில் இருக்கும் இஸ்லாமிய சமயப் பள்ளியான 'இர்ஷாத் சுஹ்ரி அல்-இஸ்லாமியா', தோ பாயோ சென்ட்ரலில் உள்ள 'ஓரியன்ட் கோல்ட்ஸ்மித்ஸ் ஆண்ட் ஜுவல்லர்ஸ்' நகைக்கடை ஆகியவை இதர கொவிட்-19 தொற்றுக் குழுமங்கள்.
பொதுவாக கூட்டம் அதிகம் கூடும் லோரோங் எட்டு உணவங்காடி நேற்று முன்தினம் ஆள் நடமாட்டமின்றி காணப்பட்டது. அங்குள்ள 80 கடைகளில் கால் பங்கிற்கும் குறைவானவையே திறந்திருந்தன.
சுத்திகரிப்புப் பணிகளுக்குப் பிறகு சந்தையும் உணவங்காடியும் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் சில கடைக்காரர்கள் தங்களின் கடைகளைத் திறப்பதை ஒத்திவைத்துள்ளனர். வாடிக்கையாளர்கள் அதிகம் வரமாட்டார்கள் எனக் கருதியதால் பல கடைக்காரர்கள் கடைகளை இன்னும் திறக்கவில்லை என்று அங்குள்ள வர்த்தகர்கள் சிலர் ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினர். தோ பாயோ பேருந்து நிறுத்தத்தில் பொதுவாக மதிய உணவு உண்ண வருவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது. வார இறுதி நாட்களில் வர்த்தகம் சற்று மேம்பட்டிருக்கும், ஆனால் குழுமம் அறிவிக்கப்படுவதற்கு முன்பிருந்ததைப் போல் நிலைமை இல்லை என்று அங்குள்ள வர்த்தகர்கள் சிலர் வருத்தம் தெரிவித்தனர். பேருந்து நிறுத்தக் குழுமத்தால் பேருந்துச் சேவைகள் சிலவற்றில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
சில பேருந்துச் சேவைகளுக்குக் காத்திருக்கவேண்டிய நேரம் சுமார் ஐந்து நிமிடங்கள் அதிகரித்துள்ளதாகப் பயணிகள் தெரிவித்தனர்.
சிலரின் அலட்சியப் போக்கால் நிலைமை இவ்வளவு மோசமடைந்திருப்பதாக சில குடியிருப்பாளர்கள் கூறினர். கொவிட்-19 குழுமங்கள் தினமும் உருவெடுத்துக் கொண்டுதான் இருக்கும் என்றும் அதற்காகப் பயத்திலேயே வாழ முடியாது என்று வேறு சில குடியிருப்பாளர்கள் கூறினர்.

