செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
ec5a15ed-6265-4941-9aa1-41ecabab7bbe
-

கொவிட்-19: குணமடைந்த

ஆக வயதானவர் மரணம்

சிங்கப்பூரில் கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்த ஆக வயதானவரான 103 வயது யாப் லே ஹோங் உயிரிழந்தார். இறப்பதற்கு முன் திருவாட்டி யாப்பின் குடலில் அடைப்பு ஏற்பட்டதாக இவரின் இரண்டாவது மகனான ஏலன் ஹோ தெரிவித்தார்.

வயிற்றுவலி ஏற்பட்டதால் சிகிச்சைக்காக இம்மாதம் 12ஆம் தேதியன்று திருவாட்டி யாப் டான் டொக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அப்போது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் இவரின் குடலில் அடைப்பு ஏற்பட்டது தெரியவந்தது. திருவாட்டி யாப் சென்ற ஆண்டு கொவிட்-19 கிருமித்தொற்று ஏற்பட்டு குணமடைந்தார்.

கொவிட்-19: மருத்துவமனையில்

சிகிச்சை பெறுவோர் குறையலாம்

தற்போதைய கொவிட்-19 கிருமிப் பரவல் சூழல் கட்டுக்குள் வந்தவுடன், கிருமித்தொற்று ஏற்பட்டோரில் 10லிருந்து 15 விழுக்காட்டினருக்கு மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சை தேவைப்படலாம் என்று சிங்கப்பூரின் மருத்துவச் சேவைகளுக்கான இயக்குநர் இணை பேராசிரியர் கென்னத் மாக் கூறியுள்ளார்.

தற்போது மருத்துவமனைகளில் அவசர சிகிச்சை பிரிவுகளில் அதிகமான கொவிட்-19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இது தற்காலிகமானது என்று அவர் சொன்னார்.

புதிய கொவிட்-19 சம்பவங்கள் குறைந்தன, இருவர் மரணம்

கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு ஆளான 80 வயதைத் தாண்டிய இரண்டு ஆண்கள் மாண்டனர். அவர்கள் உட்பட இதுவரை சிங்கப்பூரில் கிருமித்தொற்று ஏற்பட்ட 62 பேர் மாண்டுவிட்டனர். மாண்ட ஒருவர் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட 84 வயது சிங்கப்பூரர். கிருமித்தொற்றால் ஏற்பட்ட சிக்கல்கள் காரணமாக அவர் உயிரிழந்தார். அவருக்கு இருதய நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட பிரச்சினைகள் இருந்திருக்கின்றன.

மற்றொருவர் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்ட 85 வயது சிங்கப்பூரர். அவருக்கு வேறு எந்த உடல்ரீதியான பிரச்சினைகளும் இருந்ததாகத் தெரியவில்லை.

நேற்று முன்தின நிலவரப்படி புதிதாக 917 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. இந்த எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமையன்று பதிவானதைக் காட்டிலும் சற்று குறைவு. சமூக அளவில் 832 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டது. தங்கும் விடுதிகளில் இருக்கும் வெளிநாட்டு ஊழியர்கள் 78 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்துடுள்ளது. கிருமித்தொற்று ஏற்பட்ட மற்றவர்கள் வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த பயணிகள்.

பரிசோதனைகளுக்கு கூடுதல்

இடத்தை ஒதுக்கிய மருத்துவமனை

டான் டோக் செங் மருத்துவமனை அதன் அவசர சிகிச்சை பிரிவைப் பெரிதாக்கியுள்ளது. கொவிட்-19 பாதுகாப்பு நடவடிக்கைகளின் தொடர்பில் மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ள கூடுதல் இடத்தை ஒதுக்குவதற்காக இவ்வாறு செய்யப்பட்டுள்ளது.

இதனால் அவசர சிகிச்சை பிரிவுக்கு அருகே மிகக் குறைவான கார் நிறுத்தங்கள் தற்போது இருப்பதாக டான் டோக் செங் மருத்துவமனை தெரிவித்தது. அங்கு வாகனங்களில் வருவோரை இறக்கி விடுவதற்கான இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ஓங்: 101,000 சினோவேக் தடுப்பூசிகள் வந்துள்ளன

சிங்கப்பூருக்கு சுமார் 101,000 சினோவேக் தடுப்பூசிகள் சிங்கப்பூரில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் தெரிவித்துள்ளார். நேற்று முன்தினம் சிங்கப்பூருக்குக் கொண்டு வரப்பட்ட அவை, இன்னும் சில நாட்களில் பொது மருந்தகங்களில் கிடைக்கும் எனக் கூறினார்.

'எம்ஆர்என்ஏ' முறையைப் பயன்படுத்தும் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ள முடியாதோருக்கு இந்தத் தடுப்பூசிகள் உதவும் எனத் திரு ஓங் ஃபேஸ்புக்கில் குறிப்பிட்டார். இதுவரை சிங்கப்பூரின் மக்கள்தொகையில் சுமார் இரண்டு விழுக்காட்டினர் சினோவேக் தடுப்பூசிகளைப் போட்டுக்கொண்டுள்ளதாக அவர் சொன்னார்.