சிங்கப்பூர் அரசாங்கத்தின் ஆதரவில் இயங்கி வரும் அடையாளங்களை உறுதி செய்யும் சிங்பாஸின் பிரபலமும் பயன்பாடும் மிக விரைவாக அதிகரித்து வருகிறது. அனைத்துலக மின்னிலக்க அடையாளமாக அது உருவெடுத்து வருகிறது. முன்பு ஒவ்வொரு இணையத்தளத்துக்குள் செல்ல தனித்தனி மறைச்சொல்லைப் பயன்படுத்தும் நிலை இருந்தது.
ஆனால் தற்போது பல இணையத்தளங்களுக்குள் செல்ல பொதுவான தளமாக சிங்பாஸ் விளங்குகிறது. அரசாங்க இணையப்பக்கங்கள் மட்டுமின்றி தற்போது காப்புறுதி, வங்கி, தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போன்ற தனியார் துறை நிறுவனங்கள் சிலவற்றின் இணையப்பக்கங்களுக்குள் செல்லவும் சிங்பாஸைப் பயன்படுத்தலாம்.
சிங்பாஸின் பிரபலத்தை கொவிட்-19 நெருக்கடிநிலை அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
கடந்த மாத நிலவரப்படி, தங்கள் வாடிக்கையாளர்களின் அடையாளத்தை உறுதி செய்ய 300க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் சிங்பாஸைப் பயன்படுத்தின. கடந்த மார்ச் மாதத்தில் சிங்பாஸ் முறையைப் பயன்படுத்திய 200 நிறுவனங்களுடன் ஒப்பிடும்போது இது 50 விழுக்காடு அதிகம். 2018ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சிங்பாஸ் கைபேசி செயலியை முதன்முதலாகப் பயன்
படுத்தி அமைப்புகளில் என்டியுசி இன்கம் காப்புறுதி நிறுவனமும் சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் கூட்டமைப்பும் அடங்கும்.
ஓசிபிசி வங்கி வாடிக்கையாளர்கள் சிங்பாஸைப் பயன்படுத்தி தங்கள் மின்னிலக்க வங்கிச் சேவையைப் பயன்படுத்தும் முறை கடந்த ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து நடைமுறையில் உள்ளது.
தற்போது சிங்பாஸ் செயலியை ஏறத்தாழ மூன்று மில்லியன் பேர் பயன்படுத்துகின்றனர்.
இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் ஒரு மில்லியனாக இருந்தது.

