உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்ட சிங்கா முறிகளை முதல்முறையாக விற்க சிங்கப்
பூரின் மத்திய வங்கி திட்டமிட்டுள்ளது.
இந்த விற்பனை மூலம் $2.6 பில்லியன் திரட்ட அது இலக்கு கொண்டுள்ளது.
இம்மாதம் நடைபெற இருக்கும் சிங்கப்பூர் அரசாங்க உள்கட்டமைப்பு முறிகளுக்கான ஏலக்குத்தகையில் எத்தனை முதலீட்டாளர்கள் கலந்துகொள்ளலாம் என்ற தகவலை சிங்கப்பூர் நாணய ஆணையம் அதன் இணையப்
பகத்தில் நேற்று பதிவிட்டது.
ஏலக்குத்தகையில் அமைப்புகளும், சில்லறை வர்த்தக முதலீட்டாளர்களும் பங்கெடுக்கலாம்.
குறைந்தபட்சம் $1,000 ரொக்கத்துடன் முதலீட்டாளர்கள் ஏலக்குத்தகையில் பங்கெடுக்கலாம்.
டிபிஎஸ்/பிஓஎஸ்பி, ஓசிபிசி, யுஓபி தானியங்கி வங்கி இயந்திரங்கள், இணைய வங்கிச் சேவைத் தளங்கள், ஓசிபிசியின் கைபேசிச் செயலி ஆகியவை மூலம் முறிகளை வாங்கலாம்.
ஆனால் முறிகளை வாங்குவோருக்கு தனிநபர் மத்திய வைப்புத்தொகைக் கணக்கு இருக்க வேண்டும்.
முறிகள் 2051ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் முதிர்ச்சிஅடையும்.
அவற்றின் மூலம் கிடைக்கும் வட்டி தொடர்பான விவரங்கள் ஏலக்குத்தகை முடிந்து ஒரு மணி நேரத்தில் வெளியிடப்படும்.
சிங்கா முறிகள் முக்கிய உள்கட்டமைப்பு அரசாங்கக் கடன் சட்டத்தின்கீழ் விற்பனை செய்யப்படும் முதல் சிங்கப்பூர் அரசாங்க முறிகளாகும்.
புதிய குறுக்குத் தீவு, ஜூரோங் வட்டார எம்ஆர்டி ரயில் பாதைகள், உயர்ந்து வரும் கடல்
மட்டத்திடமிருந்து சிங்கப்பூரைப் பாதுகாக்க கட்டப்படும் சுவர் போன்ற நீண்டகால உள்
கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதி திரட்ட $90 பில்லியன் வரை கடன் வாங்க அரசாங்கத்துக்கு இந்தச் சட்டம் அனுமதி வழங்குகிறது.
கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு அளிக்க சிங்கப்பூர் அரசாங்கம் கடந்த இரண்டு நிதி ஆண்டுகளாக அதன் கையிருப்பு நிதியைப் பயன்படுத்தியுள்ளது.
ஆதரவுத் திட்டங்களுக்காக $53.7 பில்லியன் செலவு செய்யப்பட்டிருப்பதாகத் தெரி விக்கப்பட்டது.

