'கடல்துறை மையமாக விளங்க மின்னிலக்க உள்கட்டமைப்பு, நீடித்த நிலைத்தன்மை அவசியம்'

'கடல்துறை மையமாக விளங்க மின்னிலக்க உள்கட்டமைப்பு, நீடித்த நிலைத்தன்மை அவசியம்'

2 mins read
d532fda7-0dc1-4e4c-a713-6a87a9797221
-

அனைத்­து­லக கடல்­துறை, வர்த்­தக மைய­மாக சிங்­கப்­பூர் தொடர்ந்து விளங்­கு­வ­தற்கு அது கையா­ளும் சரக்­கின் அளவு மட்­டும் முக்­கி­ய­மல்ல; அதன் துறை­மு­கம் வழி எவ்­வாறு செயல்­தி­றத்­து­டன் சரக்கு­க­ளைக் கையாள்­கிறது என்­பதைப் பொறுத்­தும் உள்­ளது என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் தெரி­வித்­தார்.

உள்­கட்­ட­மைப்பு தொடர்ந்து ஒரு முக்­கிய அம்­ச­மாக உள்­ளது என்று கூறி­னார் அவர். பிரம்­மாண்­ட­மாக உரு­வா­கி­வ­ரும் துவாஸ் துறை­முகம், அதன் முதல் இரண்டு கப்பல் நிறுத்துமிடங்­களை ஆண்டு இறு­திக்­குள் திறக்­க­வுள்­ளது. அது தற்­போ­தைய சரக்­கு­க­ளை­யும் புதி­தாக வரக்­கூ­டிய சரக்­கு­க­ளை­யும் கையா­ளும் திற­னைக் கொண்­டி­ருக்­கும் என்று திரு ஈஸ்­வ­ரன் கூறி­னார்.

இருப்­பி­னும், இதை­யும் தாண்டி நெருக்­கு­தல்­கள் ஏற்­பட்­டால் அவற்றை மின்­னி­லக்­க­ம­யம் கொண்டு குறைக்­க­வும் நீடித்த நிலைத்­தன்மை குறித்து ஆழ்ந்து சிந்­திக்­க­வும் வேண்­டும் என்­றார்.

மூன்று நாள் 'சீ ஏஷியா' மாநாட்­டில் கலந்­து­கொண்டு பேசிய அவர், இத­னைத் தெரி­வித்­தார்.

"கப்­பல் வணி­கத்­தில் இருந்­தாலோ துறை­மு­கச் செயல்­பாட்­டில் இருந்­தாலோ, நீடித்த நிலைத்­தன்மை குறித்து நாம் வெளிப்­ப­டை­யா­கத் தீர்­வு­காண வேண்­டும். ஏனெ­னில், அது செல­வு­க­ளைப் பற்­றி­யது மட்­டும் அல்ல; போட்­டித்­தன்­மை­யைப் பற்­றி­யதும்­கூட," என்­றார் அவர்.

அனைத்­து­லக தொடர் விநி­யோ­க­மும் வர்த்­த­கங்­கள் செயல்­படும் முறை­யும் கொவிட்-19 சூழ­லால் தடை­பட்­டா­லும் தொடர்ந்து சரக்­கு­ விநியோகம் நடைபெறுவது அவ­சி­யம் என்று சுட்­டி­னார் திரு ஈஸ்­வ­ரன்.

செலவு, எளி­தில் கிடைக்­கக்­கூ­டிய தன்மை போன்ற சவால்­க­ளுக்கு இடையே, நீடித்த நிலைத்­தன்­மை­யு­டைய எரி­பொ­ருள் குறித்­துக் கடல்­து­றை­யி­னர் முயற்­சி­கள் மேற்கொள்வது பற்றியும் அமைச்­சர் கூறினார்.

"அனைத்­து­லக அள­வில் பொது­வாக நில­வும் சவால் இது. இதற்கு அனைத்­து­லக அள­வில் பொது­வான ஒரு தீர்வு தேவை," என்­றார்.

தீர்­வு­ காண்­ப­தற்காக நாடு­கள் ஆலோ­சனை அமர்­வு­க­ளி­லும் கலந்­து­ரை­யா­டல்­க­ளி­லும் தொழில்­து­றையை ஈடு­ப­டுத்த வேண்­டும் என்று திரு ஈஸ்­வ­ரன் குறிப்­பிட்­டார்.

வர்த்­த­கர்­களும் வர்த்­த­கத் தலை­வர்­களும் புரிந்­து­கொள்ள வேண்­டிய ஓர் அம்­சம் குறித்­தும் அவர் பேசி­யி­ருந்­தார்.

"வர்த்­த­கம், மின்­னி­லக்­க­ம­யம், கரி­ய­மி­ல­மின்மை ஆகி­ய­வற்­றில் ஏற்­படும் மாற்­றங்­க­ளுக்கு ஏற்ப ஊழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிப்­ப­தில் வர்த்­த­கர்­க­ளுக்­கும் வர்த்­த­கத் தலை­வர்­க­ளுக்­கும் பொறுப்பு உள்­ளது என்­பதை அறிந்­தி­ருப்­பது முக்­கி­யம்," என்­றார் அவர்.