செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
43c091d2-8869-40d5-bad3-9ea991373377
-

அரசாங்க அமைப்பை ஏமாற்றிய

குற்றத்துக்காக $6,000 அபராதம்

பாலர் பருவ மேம்பாட்டு அமைப்பிடம் 2016ஆம் ஆண்டில் போலி மானியக் கோரிக்கைகளைப் பலமுறை சமர்ப்பித்ததன் தொடர்பில் தன் மீது சுமத்தப்பட்ட இரு மோசடிக் குற்றச்சாட்டுகளை 53 வயது அருளாநாதம் ராஜேஸ்வரி (படம்) ஒப்புக்கொண்டதை அடுத்து, நேற்று அவருக்கு $6,000 அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது செயல்பாட்டில் இல்லாத 'ஃபேத் எடுகேர்' குழந்தைப் பராமரிப்பு நிலையங்களுக்கு அவர் பள்ளி முதல்வராக இருந்ததாகக் கூறப்பட்டது. பின்னர், அவர் துணை இயக்குநராகவும் பதவி உயர்வுபெற்றார்.

நிலையங்களின் இயக்குநராக இருந்த ஜோசஃபின் டான் போ சூ, இரண்டு நிலையங்களுக்கு முதல்வராக இருந்த ஃபாத்திமா பீவி முகம்மது ஷரிஃப் ஆகியோருடன் சேர்ந்து ராஜேஸ்வரி போலி கோரிக்கைகளைச் சமர்ப்பித்ததை அடுத்து அமைப்பு தவறுதலாக கிட்டத்தட்ட $5,000 குழந்தைப் பராமரிப்பு மானியத் தொகையை வழங்கி இருந்தது. இதற்கிடையே, அமைப்பை ஏமாற்றியதில் ராஜேஸ்வரிக்கு எவ்வித நேரடிப் பலனும் கிடைக்கவில்லை என்று நீதிமன்ற ஆவணங்கள் தெரிவித்தன.

உரிமம் இல்லாமல் இயங்கிய

'கேடிவி'யில் 44 பேர் சிக்கினர்

கொவிட்-19 தொடர்பான கட்டுப்பாடுகளை மீறியதற்காகவும் தங்களின் இருப்பிடங்களை விட்டு வெளியேறியதற்காகவும் இன்று 35 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும். இவர்களைச் சேர்த்து மொத்தம் 44 பேர், பூன் லே வே பகுதியின் 'டிரேட்ஹப் 21' கட்டடத்தில் உரிமமில்லாமல் இயங்கிவந்த 'கேடிவி' கூடத்தில் இவ்வாண்டு ஜனவரி 1ஆம் தேதியன்று சிக்கினர். பொது கேளிக்கை வசதிகளும் மதுபானமும் அவ்விடத்தில் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மூன்றாம் கட்டக் கட்டுப்பாடுகள் கடந்த டிசம்பர் 28ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில் சமூக ஒன்றுகூடல்களில் எட்டுப் பேர் வரை மட்டுமே கலந்துகொள்ள அனுமதிக்கப்பட்டது. மேலும், கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகளுடன் குறிப்பிட்ட சில இரவுநேரக் கேளிக்கைக் கூடங்கள் மட்டுமே அந்தக் காலகட்டத்தில் இயங்க முடியும் என்று கூறப்பட்டது.

பாலர் பள்ளியின் குத்தகை

புதுப்பிப்புக்குப் பெற்றோர்கள் மனு

கடந்த 15 ஆண்டுகளாக டெம்ப்சி ரோட்டில் செயல்பட்டு வருகிறது செயிண்ட் ஜேம்ஸ் தேவாலயப் பாலர் பள்ளி. இருப்பினும் லாப நோக்கமற்று இயங்கிவரும் இப்பள்ளியின் எதிர்காலம், சற்று கேள்விக்குறியாகியுள்ளது. கிட்டத்தட்ட 17 வீவக ஐந்தறை வீடுகளின் அளவில் உள்ள பள்ளி வளாகத்துக்கான குத்தகை, அடுத்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. 2023ஆம் ஆண்டுமுதல், மாதம் தலா $76,200 செலுத்துவதற்குப் பாலர் பள்ளியை நடத்தும் ஆங்கிலிக்கன் பாலர் பள்ளிச் சேவைகள் தயாராக இருந்தாலும், மற்ற பாலர் பள்ளி நிறுவனங்கள் அதைவிட அதிகமான ஏலத் தொகையைச் சமர்ப்பித்துள்ளதாக சிங்கப்பூர் நில ஆணையத்தின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே, பாலர் பள்ளியின் மதிப்புமிக்க பங்களிப்புகளைக் கருதி அதே இடத்தில் அது நீடிப்பதை பரிசீலிக்கக் கோரும் மனுவை மாணவர்களின் பெற்றோர் தொடங்கியுள்ளனர்.