சிங்கப்பூரர்கள் தங்கள் கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அல்லது அடையாள அட்டையை (ஐசி) அக்டோபர் 1ஆம் தேதி முதல் 'சிங்போஸ்ட்' அஞ்சல் நிலையங்களில் பெற கட்டணம் செலுத்தத் தேவையில்லை.
கடவுச்சீட்டு, அடையாள அட்டையைப் பெறுவதில் வசதி செய்துதரும் வகையில், அதற்கான செலவை குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையம் ஏற்றுக்கொள்கிறது.
"அஞ்சல் நிலையங்களில் கடவுச்சீட்டு, அடையாள அட்டைகளைப் பெறுவதை ஊக்குவிக்கும் இந்த முயற்சி, பயனாளர்களுக்கு அதிக வசதியை வழங்குவதற்கான ஆணையத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாகும்," என்று ஆணையத்தின் குடிமக்கள் சேவை மையத்தின் இயக்குநரான மூத்த உதவி ஆணையர் டொமினிக் சுவா வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
தங்கள் ஆவணங்களைப் பெற பொதுமக்கள் தீவெங்கும் உள்ள 27 அஞ்சல் நிலையங்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். தற்போது, சிங்கப்பூரர்களும் நிரந்தரவாசிகளும் தங்கள் கடவுச்சீட்டு அல்லது அடையாள அட்டையை அஞ்சல் நிலையத்தில் பெற $6 முதல் $12 வரை கட்டணம் செலுத்த வேண்டும்.
முன்னர் குடிநுழைவு, சோதனைச் சாவடி ஆணையத்தில் அங்க அடையாளங்களை உறுதிப்படுத்த முடியாதநிலையில் உள்ளவர்கள் ஆணையத்துக்கு நேரடியாகச் சென்று தங்கள் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
ஆவணங்கள் தயாரானதும் அவற்றைப் பெறுவதற்கான தெரிவுகள் குறித்து விண்ணப்பதாரர்களுக்கு தெரிவிக்கப்படும்.
தகுதிபெறும் சிங்கப்பூரர்கள் தாங்கள் தேர்வுசெய்யும் அஞ்சல் நிலையத்தில் ஆவணங்களைப் பெற https://eservices.ica.gov.sg/ibook/index.do என்ற இணையத்தளத்தில் பதிவுசெய்ய வேண்டும்.
கடவுச்சீட்டுகளை அடிக்கடி மாற்ற வேண்டிய தேவையைக் குறைக்கும் நோக்கில், அக்டோபர் 1 முதல் விண்ணப்பிக்கும் 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களுக்கு சிங்கப்பூர் கடவுச்சீட்டுகளின் செல்லுபடியாகும் காலம் 10 ஆண்டுகளாக அதிகரிக்கப்படும் என்று மே மாதம் ஆணையம் அறிவித்தது.

