அண்மையில் அதிகரித்துள்ள கொவிட்-19 சம்பவங்களைச் சமாளிக்க சிங்கப்பூரின் சுகாதாரப் பராமரிப்புப் பிரிவு போராடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு பக்கம் பொது மக்களிடையே எரிச்சலும் குழப்பமும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சிலர் நோய்த்தொற்று குறித்து தத்தம் சூழலுக்கு ஏற்ப அதிகாரபூர்வ ஆலோசனையைப் பெற சுகாதார அமைச்சுடன் தொடர்புகொள்ள இயலவில்லை என குறை கூறியுள்ளனர். மேலும் சிலர் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டும், தங்களைக் குணமடையும் விடுதிக்கு அழைத்துச் செல்ல அதிக நேரமாகிறது என்று குறை கூறியுள்ளனர். ஆகவே, தகவல்களையும் அனுபவங்களையும் ஒருங்கிணைத்து பகிர்ந்துகொள்ள 'டெலிகிராம்' செயலியில் 'எஸ்ஜி குவாரன்டீன் ஆர்டர் சப்போர்ட் குருப்' என்ற குழு ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.
அவர்களிடையே சிறார்களுக்கும் மூத்தோருக்கும் நோய்த்தொற்று ஏற்பட்ட சில குடும்ங்களில் அதிக குழப்பங்களும் கவலைகளும் நிலவுவதாக அறியப்படுகிறது. மேலும், சுகாதார அமைச்சுக்குத் தொலைபேசி மூலம் பலமுறை தொடர்புகொள்ள முயன்றபோது தொடர்பு துண்டிக்கப்படுவது குறித்தும், பதிவுசெய்யப்பட்ட பதில்களே கிடைப்பதும் மக்களிடையே பெரிய மன வருத்தம் எழுந்துள்ளதும் தெரியவந்துள்ளதாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கூறியது.

