சிங்கப்பூரில் கொவிட்-19 தொற்றால் ஏற்பட்ட உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக மேலும் மூன்று சிங்கப்பூரர்கள் உயிரிழந்தனர். இவர்களையும் சேர்த்து இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 65ஆக உயர்ந்துள்ளது.
அந்த மூவரில் ஒருவர் 62 வயது மாது. நீண்டநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் திங்கட்கிழமை உயிரிழந்தார்.
ஜூலை 23ஆம் தேதி அவருக்குத் தொற்று உறுதியானது. அதற்கு அடுத்த நாள் கூ டெக் புவாட் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். கொவிட்-19க்கு எதிராக அவர் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை. அவருக்கு உயர் ரத்த அழுத்தமும் உயர் ரத்தக் கொழுப்பும் இருந்தது.
இரண்டாமவர், 74 வயது ஆடவர். செப்டம்பர் 19ஆம் தேதி அவர் உயிரிழந்தார். வேறொரு உடல்நலப் பிரச்சினைக்காக ஆகஸ்ட் 31ஆம் தேதி அவர் டான் டோக் செங் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது கொவிட்-19 பரிசோதனையில் 'தொற்று இல்லை' எனத் தெரியவந்தது.
எனினும், செப்டம்பர் 9ஆம் தேதி எடுக்கப்பட்ட மற்றொரு பரிசோதனையில் அவருக்குத் தொற்று உறுதியானது. கொவிட்-19க்கு எதிராக அவர் ஒருமுறை தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
அவருக்கு நாள்பட்ட சிறுநீரகப் பிரச்சினை, நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உயர் ரத்தக் கொழுப்பு ஆகிய மருத்துவப் பிரச்சினைகள் இருந்தன.
மூன்றாமவர், 83 வயது ஆடவர். அவர் செப்டம்பர் 20ஆம் தேதி உயிரிழந்தார். செப்டம்பர் 15ஆம் தேதி இங் டெங் ஃபோங் மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் அவருக்குத் தொற்று உறுதியானது.
அவர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அவருக்கு நாள்பட்ட நுரையீரல் பிரச்சினையும் நிமோனியாவும் இருந்தது. இந்த மருத்துவப் பிரச்சினைகளும் முதிர்ந்த வயதும் அவர் கடுமையாக நோய்வாய்ப்பட காரணமாக இருந்ததாக சுகாதார அமைச்சு கூறியது.
இதற்கிடையே, சிங்கப்பூரில் கடந்த நான்கு நாள்களில் மூன்றாவது முறையாக கொவிட்-19 பாதிப்பு 1,000ஐ கடந்தது.
செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 21) மொத்தம் 1,178 பேருக்குத் தொற்று கண்டறியப்பட்டது. சமூக அளவில் 1,038 பேரும் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதிகளில் 135 பேரும் அவர்களில் அடங்குவர். வெளிநாடுகளிலிருந்து சிங்கப்பூர் வந்த ஐந்து பேருக்கும் தொற்று உறுதியானது.
மருத்துவமனைகளில் தற்போது 1,109 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று முன்தின நிலவரப்படி, இந்த எண்ணிக்கை 1,055ஆக இருந்தது.
மருத்துவமனைகளில் 147 பேருக்குச் செயற்கை உயிர்வாயு தேவைப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் 17 பேர் உள்ளனர்.

