அங் மோ கியோ சமூக மருத்துவமனை ஒன்றில் வருகையாளர்களுக்குத் தடை
அங் மோ கியோவில் உள்ள தை ஹுவா குவான் மருத்துவமனை, வருகையாளர்களுக்கு அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை தடை விதித்துள்ளது. சமூகத்தொற்று அதிகரிப்பதைத் தொடர்ந்து அந்த சமூக மருத்துவமனை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இருப்பினும் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகள் அல்லது பராமரிப்பாளர்களின் உதவி தேவைப்படும் நோயாளிகள் ஆகியோரின் அன்புக்குரியவர்களுக்கும், பராமரிப்பாளர்களுக்கும் அனுமதி அளிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்தது. அவ்வாறு அனுமதிக்கப்படுவோர், கொவிட்-19 தொற்று பாதிப்பு இல்லை என்பதற்கான ஏஆர்டி சோதனை முடிவு அல்லது வருகை தரும் நாளுக்கு 24 மணி நேரத்திற்கு முன்னதாக பிசிஆர் சோதனை செய்துகொண்டிருக்க வேண்டும். வருகையாளர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தபோதிலும், அங்குள்ள நோயாளிகள் தங்கள் அன்புக்குரியவர்களிடம் இணையம் வழி கலந்துரையாடும் வகையில் இணைய வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மருத்துவமனை தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு இடைவெளியைக்
கடைப்பிடிக்காத 19 பேரிடம் விசாரணை
பாதுகாப்பு இடைவெளி கட்டுப்பாட்டை மீறியதற்காக
19 பேரிடம் போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. அவர்கள் இந்த மாதம் 20ஆம் தேதியன்று உரிமம் பெறாத மதுக்கூடம் ஒன்றில் ஒன்றுகூடி மதுபானம் அருந்திக்கொண்டு, சிறுசிறு விளையாட்டுகளில் ஈடுபட்டனர். இந்தச் சம்பவம் பாலஸ்டியர் சாலையில் வர்த்தக மற்றும் குடியிருப்புக் கட்டடம் ஒன்றில் நிகழ்ந்தது. கொவிட்-19 தொற்றுச் சம்பவத்தைக் கட்டுப்படுத்தும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு இடைவெளியைக் அவர்கள் கடைப்பிடிக்காமல் ஒன்றுகூடலில் ஈடுபட்டதற்காக அவர்களிடம் போலிஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறது. நேற்று போலிஸ் இதுகுறித்து ஓர் அறிக்கை வெளியிட்டிருந்தது. அதில், 19 பேர், உரிமம் பெறாத ஓரிடத்தில் ஒன்றுகூடி மதுபானம் அருந்தி கராவோக்கே மற்றும் மேசைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் ஈடுபட்டதாகக் கூறியது. அந்த உரிமம் பெறாத கேளிக்கைக்கூடத்தை நடத்தியவர் என என்று நம்பப்படும் 25 ஆடவர் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

