புதிய ஓராண்டு கால முன்னோட்டத் திட்டத்தின்கீழ், வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகளில் வசிக்கும் குடியிருப்பாளர்கள் சிலரிடமிருந்து உணவுக் கழிவு சேகரிக்கப்படவுள்ளதாக தேசிய சுற்றுப்புற வாரியம் நேற்று தெரிவித்தது.
கழிவை அகற்றும் நிறுவனமான '800 சூப்பர்', இம்முன்னோட்டத் திட்டத்தை வரும் நவம்பர் மாதம் முதல் தொடங்கவுள்ளது. பீஷான், அங் மோ கியோ, சிராங்கூன், தோ பாயோ ஆகிய வட்டாரங்களை உள்ளடக்கிய அங் மோ கியோ-தோ பாயோ சேகரித்தல் பிரிவில் நிறுவனம் தன் பணியைத் தொடங்கும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வீவக கட்டடங்களில் பத்து அறிவார்ந்த 'லாக்கர்'கள் வைக்கப்படும். தொலைவில் இருந்தபடி பயன்படுத்தும் அறிவார்ந்த கட்டமைப்புடன் 'கியூஆர்' குறியீட்டை வருடும் அம்சமும் எடை நிர்ணயிக்கும் சாதனமும் இந்த லாக்கர்களில் இருக்கும். திட்டத்தில் பங்கேற்கும் குடியிருப்பாளர்களுக்கு மறுபயனீட்டு நெகிழிப் பெட்டி ஒன்று தரப்படும். அதில் அவர்கள் தங்களின் உணவுக் கழிவைச் சேகரிக்க வேண்டும். பின்னர், அது நிரம்பியதும், அறிவார்ந்த லாக்கர்களுக்குள் அதைப் போட்டுவிட்டு காலியான ஒரு பெட்டியை எடுத்துக்கொள்ளலாம்.
தங்களுக்கென்ற ஒரு கியூஆர் குறியீட்டைப் பயன்படுத்துவதன் வழி, குடியிருப்பாளர்கள் தங்களது உணவுக் கழிவுப் பெட்டியின் எடையைக் கண்டறிந்து அதன் மூலம் புள்ளிகளைப் பெறுவர். கைபேசி செயலி மூலம் வழங்கப்படும் இப்புள்ளிகளைச் சேகரித்த பிறகு, '800 சூப்பர்' நிறுவனத்திடமிருந்து மளிகைப் பொருள் காசோலைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.
முன்னோட்டத் திட்டம் வெற்றிகரமாக அமைந்தால், நிறுவனம் மேலும் 83 அறிவார்ந்த லாக்கர்களை அதே பகுதியிலுள்ள மற்ற வீவக கட்டடங்களிலும் பயன்படுத்தும். இதற்கிடையே, அங் மோ கியோ-தோ பாயோ பிரிவுக் குடியிருப்பாளர்கள் அனைவரும், புத்தாக்க அம்சம் பொருந்திய புதிய கழிவு சேகரிக்கும் வாகனங்களை விரைவில் பார்ப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 14 மின்சார வாகனங்கள், ஒரு பக்கமாக மறுசுழற்சிப் பொருட்களை ஏற்றும் வாகனம், இருவகை கழிவுப் பொருட்களைத் தனித்தனியே சேகரிக்கும் நான்கு வாகனங்கள் ஆகியவை இப்புதிய வாகனங்களில் அடங்கும்.
சாலைகளில் இத்தகைய கழிவு சேகரிக்கும் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது, உற்பத்தித்திறனையும் சேவைச் செயலாக்கத்தையும் மேம்படுத்துவது, கழிவு சேகரிக்கும் சேவைகளின் ஒட்டுமொத்த கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைப்பது போன்றவற்றுக்கு இம்முயற்சிகள் கைகொடுக்கும் என்று வாரியம் தெரிவித்தது.

