தோட்டக்கலை ஆர்வலர்கள் இனி தங்களின் பசுமைக் கைவண்ணத்தைக் காட்ட மேலும் ஒரு வாய்ப்பு உருவாகியுள்ளது. தீவெங்கும் உள்ள எட்டு பூங்காக்களில் தோட்டங்கள் அமைப்பதற்காக மொத்தம் 360 புதிய நிலங்கள் ஒதுக்கப்பட உள்ளன.
இவற்றுடன் சிங்கப்பூரில் உள்ள 23 பூங்காக்கள் மற்றும் தோட்டங்களில் 2,000க்கும் மேற்பட்ட தோட்ட நிலங்கள் அமைந்திடும்.
ஒவ்வொரு நிலத்திலும் உயர்த்தப்பட்ட செடி நடும் பகுதி ஒன்று இருக்கும். அத்துடன் தோட்ட வேலைக்குத் தேவைப்படும் உபகரணங்களை வைப்பதற்காக ஒரு சிறிய சேமிப்புப் பகுதியும் இருக்கும்.
நிலம் ஒவ்வொன்றும் ஆண்டுக்கு 57 வெள்ளி கட்டணத்தில் மூன்றாண்டு வரை ஒருவருக்குக் குத்தகைக்கு விடப்படும்.
பிடோக் அவென்யூ 3, எங்கர்வேல் ஸ்திரீட்டின் செங்காங் ரிவர்சைடு, ஈசூன் அவென்யூ 11, காலாங் ரிவர்சைடு உட்பட எட்டு பூங்காக்களில் இந்தப் புதிய குட்டித் தோட்டங்கள் அமைக்கப்படும்.
பிடோக் டவுன் பூங்காவில் ஆக அதிக எண்ணிக்கையில் தோட்டம் அமைப்பதற்கான நிலங்கள் ஒதுக்கப்படவுள்ளன. அங்கு 128 நிலங்கள் இருக்கும்.
கொள்ளைநோய்ச் சூழல், வீட்டில் இருந்து வேலை செய்யும் நிலை போன்றவற்றால் அதிக நேரத்தை வீட்டில் செலவிடும் சிங்கப்பூரர்கள், தோட்ட வேலையில் பொழுதுபோக்காக ஈடுபடும் போக்கு அதிகரித்துவருவதைக் காண முடிகிறது.
இந்நிலையில், புதிதாக அமைக்கப்படவுள்ள நிலங்கள், அவர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டும் வகையில் விளங்கிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய நிலங்களுக்கான இணைய விண்ணப்பங்களை நாளை காலை 10 மணி முதல் சமர்ப்பிக்கலாம். கணினி வழியான குலுக்கல் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு நிலங்கள் தரப்படும். விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 6.
அதையடுத்து, விண்ணப்பம் வெற்றிகரமாக ஏற்றுக்கொள்ளப்பட்டதா என்பது மூன்று மாதங்களுக்குள் விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்கப்படும்.
தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள தோட்ட நிலங்களுக்கு விண்ணப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுவதாக தேசிய பூங்கா கழகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

