சிங்கப்பூர் அதன் பருவநிலை இலக்கை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆபத்தான அளவுக்குப் போதவில்லை என்று ஆய்வுக் கூட்டமைப்பு ஒன்று கூறியுள்ளது. ஐந்து புள்ளி அளவீட்டின் ஆக மோசமான தரத்தில், ஈரான், ரஷ்யா, சவூதி அரேபியா, தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் சிங்கப்பூரையும் அது வரிசைப்படுத்தியிருக்கிறது.
ஆனால் இதனை மறுத்துள்ள சிங்கப்பூர் அரசாங்கம், ஆய்வின் மதிப்பீடு மேலோட்டமாக இருப்பதாகக் கூறியுள்ளது.
குறைந்த பரப்பளவில் நெருக்கி வாழும் மக்கள்தொகை, குறைவான புதுப்பிக்கக்கூடிய எரிசக்தி வளங்கள் போன்றவற்றை ஆய்வு கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை என்று அரசாங்கம் தெரிவித்தது.
ஜெர்மனியைத் தளமாகக் கொண்ட பருவநிலை பகுப்பாய்வு நிலையம், பருவநிலை கல்விக் கழகம் ஆகிய இரண்டும் கூட்டாகச் சேர்ந்து இந்தப் பருவநிலை கண்காணிப்பு ஆய்வை நடத்தின.
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வேறு 39 நாடுகளும் அளித்துள்ள பாரிஸ் பருவநிலை உடன்பாட்டு உறுதிமொழியை அடிப்படையாகக் கொண்டு அவை பகுப்பாய்வு செய்துள்ளன.
உலகின் 80 விழுக்காடு கரிம வெளியேற்றத்துக்கு இந்நாடுகள் பொறுப்பு வகிக்கின்றன.
உலகளாவிய கரிம வெளியேற்றத்துடன் ஒப்பிடுகையில் சிங்கப்பூரின் பங்கு 0.11% மட்டுமே.
பாரிஸ் ஒப்பந்த உடன்பாட்டை எட்டக்கூடிய நடவடிக்கைகளை காம்பியா ஒன்றுதான் எடுத்து வருவதாக ஜெர்மானிய நிலையங்கள் வெளியிட்ட ஆய்வு கூறுகிறது.

