புதிதாக வீடு வாங்குவோர் இனி 'ஒன்மேப்3டி' என்ற முப்பரிமாண வரைபடம் மூலம் தங்கள் எதிர்கால வீட்டு வடிவத்தை, அவை கட்டி முடிக்கப்படுவதற்கு முன்பே, காணலாம்.
இந்த வரைபடத்தைப் பயன் படுத்தி ஆளில்லா வானூர்தியை இயக்குவோர் அதன் பாதையையும் திட்டமிடலாம்.
இந்த முப்பரிமாண வரைபடம் 2010ஆம் ஆண்டு முதல் சிங்கப்பூர் நில ஆணையத்தின் பயன்பாட்டில் இருக்கும் அதிகாரத்துவ இரு பரிமாண வரைபடமான 'ஒன்மேப்' பிற்கு இணையான வரைபடம் ஆகும்.
முப்பரிமாண நில இயல் தொழில்நுட்பத்தையும் நகர மாதிரி வடிவங்களை ஏற்படுத்தும் நடைமுறையையும் கொண்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டது.
இந்த முப்பரிமாண வரைபடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
நிலச் சொத்து, தளவாடங்கள், ஆளில்லா வானூர்திகள், மேம்படுத்தப்பட்ட யதார்த்த நிலை, மெய்நிகர் தொழில்நுட்பம் போன்றவற்றில் ஈடுபடும் 20 நிறுவனங்கள் இந்த வரைபடத்தை பயன்படுத்து வதில் ஆர்வமாக உள்ளன.
இதுபற்றிக் கருத்துரைத்த புரோப்நெக்ஸ் நிலச் சொத்து நிறுவன தலைமை நிர்வாகி இஸ்மாயில் கஃபூர், நிலச் சொத்து தொழில் துறையில் இது முக்கிய மாற்றங் களைக் கொண்டு வரவல்லது என்று கூறியுள்ளார்.
"ஒன்மேப் வரைபட உதிவியுடன் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு நாங்கள் மேம்பட்ட சேவையை வழங்கலாம். இதைக்கொண்டு ஒரு குறிப்பிட்ட இடத்தை அவர்கள் நேரடியாகக் காண்பதுடன் அதன் அக்கம்பக்கத்தில் உள்ள பள்ளிகள், மற்ற வசதிகள் போன்றவற்றைக் காணவும் நாங்கள் ஏற்பாடு செய்யலாம்," என்று விளக்கினார்
இதன் தொடர்பில் புரோப்நெக்ஸ் நிறுவனம் நில இயல் தொடர்பான தகவல்களைப் பெறவும், இந்தப் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது பற்றியும் ஆணையத்துடன் சென்ற வாரம் புரிந்துணர்வு குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளது.
இதேபோல் வேறு இரு நிறுவனங்களும் ஆணையத்துடன் புரிந்துணர்வுக் குறிப்புகளில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
'ஒன்மேப்3டி' வரைபடத்தின் அறிமுக நிகழ்ச்சியில் சென்ற புதன்கிழமை 15ஆம் தேதி கலந்துகொண்ட இரண்டாம் சட்ட அமைச்சர் எட்வின் டோங், சிங்கப்பூரின் விவேக நகர தொலைநோக்குப் பார்வையில் ஓர் இன்றிமையா அம்சமாக விளங்கும் என்று குறிப்பிட்டார்.

