தொழில்நுட்பக் கல்விக்கழக (ஐடிஇ) கல்லூரி சென்ட்ரல் வளாகத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் தமது மனைவியைக் கத்தியால் குத்திக் கொன்ற 69 வயது நபருக்கு நேற்று ஆயுள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சீட் செர் ஹிங் மீது முன்னதாக குற்றவியல் சட்டம் பிரிவு 300(ஏ)யின் கீழ் கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இப்பிரிவில் மரணதண்டனை கட்டாயமாகும்.
அவர் இதை எதிர்த்து வாதாடப் போவதில்லை என்று தெரிவித்தபிறகு, அக்குற்றச்சாட்டு கடந்த மாதம் மாற்றப்பட்டது. மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் பிரிவு 300(சி)யின் கீழ், உயிர் பறிக்கும் காயங்கள் விளைவித்து நோக்கத்துடன் கொலை செய்த குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
சீட்டுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதை தாங்கள் எதிர்க்கவில்லை என்று அரசாங்க வழக்கறிஞர்கள் கூறினர்.
ஐடிஇயில் பணிசெய்து ஓய்வுபெற்ற சீட், கொலை நடப்பதற்கு முன் ஏழு ஆண்டுகளாக தமது முன்னாள் மனைவியான லாவ் ஹுவீ கியாக்கிடமிருந்து பணம் வேண்டும் என்று வற்புறுத்தி வந்தார். விவாகரத்துக்குப் பிறகு, தமக்குக் கூடுதல் சொத்தும் பணமும் கிடைத்திருக்க வேண்டும் என்று அவர் நம்பியதாக உயர் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
திருவாட்டி லாவ் வேறு ஒருவருடன் தொடர்பு வைத்திருந்ததைக் கண்டுபிடித்ததாக அவர் கருதிய தேதிகளைக் கூட கத்தி ஒன்றில் அவர் பொறித்து வைத்திருந்தார்.
அக்கத்தி உட்பட மூன்று கத்திகளை எடுத்துக்கொண்டு, கடந்த 2018 ஆம் ஆண்டு ஆண்டு ஜூலை 19ஆம் தேதி, அங் மோ கியோவில் உள்ள ஐடிஈ கல்லூரி வளாகத்துக்குச் சென்ற சீட் திருவாட்டி லாவ்வை நேருக்கு நேர் எதிர்த்து நின்றார். திருவாட்டி லாவ்வின் வாகனத்துக்குள் இருவருக்கும் இடையே வாக்குவாதமும் கடைசியில் போராட்டமும் ஏற்பட்டது.
தப்பிக்க முயன்ற திருவாட்டி லாவ்வை சீட எட்டுமுறை கத்தியால் குத்தினார். பின்னர் தமது மார்புப் பகுதியில் தம்மைத்தாமே 13 முறை குத்திக்கொண்டு முன்னாள் மனையிவின் மீது சாய்ந்தார்.
'என்னைச் சாக விடுங்கள், காப்பாற்றாதீர்கள்' என்று அவர் வழிப்போக்கர்களிடம் கூறியதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
திருவாட்டி லாவ்வின் நெஞ்சுப் பகுதி, நடு முதுகின் இடப்புறம், கீழ் முதுகு ஆகியவற்றில் ஏற்பட்ட மூன்று கத்திக்குத்துக் காயங்கள் ஒவ்வொன்றும் மரணத்துக்கு இட்டுச்செல்லக் கூடியவை என்று தடய நோயியல் நிபுணர் நீதிமன்றத்தில் கூறினார்.
கடந்த 1993ஆம் ஆண்டு திரு மணம் செய்த சீட்டும் திருவாட்டி லாவ்வும் 2011ஆம் விவாகரத்து செய்தனர். அவர்களுக்கு ஒரு மகள் உண்டு. திருவாட்டி லாவ் ஐடிஇ கல்லூரி சென்ட்ரலில் தேர்வுப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தார்.

