செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a18f738b-7868-471f-8607-0819db654de4
-

பெரிய கார்களுக்கான சிஓஇ ஆறு ஆண்டு இல்லாத அளவு உயர்ந்தது

வாகன உரிமைச் சான்றிதழ் (சிஓஇ) கட்டணங்கள் நேற்று பெரும்பாலான பிரிவுகளில் உயர்ந்துள்ளது. அதிலும், பொதுப் பிரிவில் கட்டணம், ஆறு ஆண்டுகளில் முதன்முறையாக $70,000ஐத் தாண்டியது.

மோட்டார்சைக்கிள்கள் தவிர மற்ற வாகனங்களுக்குப் பயன்படுத்தப்படக்கூடிய வாகனங்களுக்கான பொதுப் பிரிவில், சிஓஇ வாகன உரிமைச் சான்றிதழ் கட்டணம் 8.2% உயர்ந்து, $70,002 ஆனது. இப்பிரிவு பெரும்பாலும் பெரிய கார்களுக்குப் பயன்படுகிறது.

1,600சிசிக்கு மேற்பட்ட பெரிய ரக கார்களுக்கான சிஓஇ $62,600லிருந்து $68,310 ஆகக் கூடியது.

இதன்வழி பெரிய கார்களுக்கான சிஓஇ, 2015க்குப் பிறகு முதன்முறையாக ஆக அதிக அளவுக்கு கூடியுள்ளது.

1,600சிசி அளவிலான சிறிய ரக கார்களுக்கான சிஓஇ $47,000லிருந்து 2% கூடி $48,000 ஆக அதிகரித்தது.

வர்த்தகப் பிரிவு வாகனங்களுக்கான சிஓஇ $40,001லிருந்து குறைந்து $39,000 ஆனது. மோட்டார்சைக்கிள்களுக்கான சிஓஇ கட்டணம் $600 குறைந்து, $9,089 ஆனது.

சிங்கப்பூர் மல்யுத்த வீரருக்கு முதல் 'டபுள்டபுள்யூஈ' ஆட்டத்தில் வெற்றி

உலக மல்யுத்தக் கேளிக்கைப் போட்டியில் (டபுள்யூடபுள்யூஈ) சேர்ந்துள்ள முதல் சிங்கப்பூரரான ஷான் டானுக்கு தொடக்க ஆட்டத்திலேயே நேற்று முன்தினம் வெற்றி கிட்டியது.

டாண்டே சென் எனும் பெயரில் சண்டையிடும் 25 வயது டான், டிரெய் பேக்ஸ்டர் என்பவரை ஆட்டம் தொடங்கிய ஒரு நிமிடத்திற்குள் தோற்கடித்தார்.

ஆசியாவைச் சேர்ந்த மற்றவர்களுடன் சேர்ந்து அமெரிக்காவின் ஃபுளோரிடாவில் உள்ள டபுள்யூடபுள்யூஈ பர்ஃபார்மன்ஸ் சென்டரில் கடந்த சில மாதங்களாக டான் பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

ஈராண்டுகளுக்கு முன்பு சீனாவின் ஷங்ஹாய் நகரில் டபுள்யூடபுள்யூஈ போட்டி ஒன்றில் பங்கேற்று டான் தமது ஆற்றலைச் சோதித்துப் பார்த்தார்.

'மைரிபப்ளிக்' நிறுவனத்தின்

50.1% பங்கை வாங்கிய ஸ்டார்ஹப்

உள்ளூர் தொலைத்தொடர்பு நிறுவனமான ஸ்டார்ஹப், சிங்கப்பூரில் உள்ள குடியிருப்பு, வர்த்தக வாடிக்கையாளர் களுக்கான போட்டி இணைய சேவையான 'மை ரிபப்ளிக்'-இன் அகன்ற அலைவரிசை வர்த்தகத்தில் 50.1 விழுக்காடு பங்குகளை வாங்கவுள்ளது.

இது சிங்கப்பூரின் அகன்ற அலைவரிசை சந்தையில் ஸ்டார்ஹப்பின் நிலையை ஒருங்கிணைத்து, வலுப்படுத்து வதுடன் சந்தை அளவில் 40 விழுக்காடாக அதன் பங்கை அதிகரிக்கும் என்று இரு நிறுவனங்களும் கூறின.

'மை ரிபப்ளிக்'கில் ஸ்டார்ஹப்பின் மொத்த முதலீடு $162.8 மில்லியன் வரை இருக்கும். 50.1% பங்குகளின் முதல் கட்ட விலை $70.8 மில்லியன் ஆகும்.

நிதி நிலவரம், 'மை ரிபப்ளிக் அகன்ற அலைவரிசை ஆகியவற்றைப் பொறுத்து எதிர்காலத்தில் இந்த விலை $92 மில்லியன் வரை அதிகரிக்கக்கூடும்.