தன்னைவிட்டுப் பிரிந்து சென்ற மனைவியை சமாதானத்துக்குப் பலமுறை அழைத்தும் வராததால் அவரைக் கடத்திச்சென்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிடுவதாக கணவர் மிரட்டியிருக்கிறார். தன்னையும் மாய்த்துக் கொள்வதாக அவர் அச்சுறுத்தியுள்ளார்.
தற்போது 40 வயதாகும் முருகன் நண்டோ, "எனக்குக் கிடைக்காத மனைவியை வேறு யாருக்கும் கிடைக்கவிட மாட்டேன்," என்று நண்பரிடம் கூறியிருக்கிறார்.
2019 ஜூலை 2ஆம் தேதி 11.00 மணியளவில் துவாஸ் சோதனைச் சாவடியைக் கடந்து செல்ல முயன்றபோது போலிசார் அவரைக் கைது செய்தனர். கடத்தப்பட்ட அவரது மனைவியான 40 வயது கிருஷ்ணவேணி சுப்ரமணியத்தையும் போலிசார் மீட்டனர்.
அந்தச் சமயத்தில் மலேசிய தம்பதியர் ஜோகூருக்குத் திரும்பிக் கொண்டிருந்தனர்.
திருமதி கிருஷ்ணவேணியின் உறவினர் ஒருவர் முன்கூட்டியே கணவரின் திட்டத்தை போலிசுக்குத் தெரிவித்திருந்தார்.
சிங்கப்பூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்ட முருகன் தன்மீது சுமத்தப்பட்ட கடத்தல், மிரட்டல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார்.
2007இல் திருமணம் புரிந்த அவர்கள் ஜொகூர் பாருவில் வசித்து வந்தனர். ஆனால் திருமண வாழ்க்கை கசந்தது.
முருகன் தனது மனைவியை அடித்துத் துன்புறுத்தினார் என்று போலிஸ் விசாரணையில் தெரிய வந்தது.
சூதாட்டப் பழக்கத்தால் அவர் கடனாளி ஆனார்.
கடந்த 2019இல் தமது பிரச்சினைகள் பற்றியும் தாம் தனிமையில் இருந்ததைப் பற்றியும் தோழியிடம் கூறினார் கிருஷ்ணவேணி.
அவர் மூலம் புதிய நண்பர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. இருவரும் தொலைபேசி வழியாக மட்டும் பேசி வந்தனர்.
மனைவியின் தொலைபேசியில் குறுஞ்செய்திகளைக் கண்ட முருகன், தமது மனைவியிடம் இதைப் பற்றிக் கேள்வி எழுப்ப, திருமதி கிருஷ்ணவேணி தாம் அத்தகைய கள்ளத் தொடர்பு வைத்திருக்கவில்லை என்றார்.
ஜொகூர் பாருவில் உள்ள தமது தாயாரின் வீட்டுக்கு மாறியதுடன், விவாகரத்து பெற கிருஷ்ணவேணி விண்ணப்பம் செய்தார்.