கடந்த பிப்ரவரி மாதம் துவாஸ் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவம் பற்றி நடந்துவரும் விசாரணையில், மாண்ட ஊழியர்கள் பணியாற்றிய நிறுவனத்தின் இயக்குநர் இன்று சாட்சி அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திரு சுவா சிங் டா, ஸ்டார்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்தின் ஒரே இயக்குநரும் பங்குதாரரும் ஆவார். துவாஸ் வளாகத்தில் உற்பத்திக்கு அவர்தான் ஒட்டுமொத்தப் பொறுப்பாளராக இருந்தார்.
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி காலை 11 மணிக்கு, 32ஈ துவாஸ் அவன்யூ 11இல் உள்ள கட்டடத்தின் முதல் மாடியில் இருந்த பட்டறையில் வெடிப்பு நிகழ்ந்தது.
அந்நேரத்தில் ஸ்டார்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்தின் எட்டு ஊழியர்கள் அந்த இடத்தில் இருந்தனர்.
திரு சுப்பையன் மாரிமுத்து, 38, திரு ஷொஹெல் முகமது, 23, திரு அனிசுஸமான் முகமது, 29 ஆகிய மூன்று பேர் அதில் மாண்டனர். உடல் எங்கும் 90% தீக்காயங்கள் ஏற்படு, மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி அவர்கள் மூவரும் உயிரிழந்தனர்.
கடந்த திங்கட்கிழமை முதல் நேற்றுவரை நடைபெற்ற பொது விசாரணையில் வெடிப்புக்கு முன்னர் நடந்த சம்பவங்கள் பற்றி ஆராயப்பட்டது. குறிப்பாக, தீப் பாதுகாப்பில் பயன்படும் மூலப்பொருட் களைச் செய்யப் பயன்படுத்தப்பட்ட கலவை இயந்திரம் பற்றிப் பல கேள்விகள் எழுந்தன.
நேற்று ஸ்டார்ஸ் என்ஜினியரிங் நிறுவனத்தைச் சேர்ந்த திட்ட நிர்வாகி பாண்டி முருகானந்தமும் பற்ற வைப்பு தொழிலாளராகப் பணியாற்றிய திரு முல்லா முகமது நாசிமும் சாட்சியம் அளித்தனர்.
திரு சுவாவின் உத்தரவின்படி இயந்திரத்தில் அவர் மேற்கொண்ட பற்ற வைப்பில் 500 வெடிப்புகளும் இடைவெளிகளும் இருந்ததாகக் கூறப்பட்டது. ஆனால் தாம் அதனைச் சரியாகச் செய்ததாக நினைத்ததாக திரு முல்லா முகமது கூறினார்.
திரு முருகானந்தம், துவாஸ் பட்டறையின் செயல்பாடுகளுக்குத் தாம் பொறுப்பு வகிக்கவில்லை என்றும் ஊழியர்களின் எண்ணிக்கை தமது பொறுப்பு என்றும் கூறினார்.
திரு சுவாவும் பொது நிர்வாகி யாகப் பணியாற்றிய அவரது சகோ தரருமான திரு டெஸ்மண்ட் சுவா வும் தமது மேலதிகாரிகள் என்றார் திரு முருகானந்தம்.

