கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைப் பராமரிப்பதற்கு மருத்துவமனைகளுக்கும் சமூகப் பராமரிப்பு இல்லங்களுக்கும் ஏற்படும் நெருக்கடியை குறைப்பதற்கே வீட்டில் இருந்து குணமடையும் முறைதான் வீட்டில் குணமடைவது.
அன்றாடம் பாதிக்கப்படுவோரில் 40 விழுக்காட்டினர் வீட்டில் இருந்து குணமடைய முடியும். இருப்பினும் 70 வயதுக்கும் அதற்கு மேற்பட்ட வயதினர், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்போர் ஆகியோர் வழக்கம்போல் மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்களில் அனுமதிக்கப்படுவர். வீட்டில் குணமடையும் முறை குறித்து எழுந்துள்ள சந்தேகங்களைத் தீர்க்கும் வகையில் சில கேள்விகளுக்கு சுகாதார அமைச்சு நேற்று பதில் அளித்தது.
தகுதிபெறுவோர்
வீட்டில் குணமடையும் முறைக்கு முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்ட 12 வயது முதல் 69 வயதுள்ளவர்கள் தகுதி பெறுவர்.
தொற்றுக்கான இலேசான அறிகுறிகள் அல்லது எவ்வித அறிகுறியும் இல்லாதவர்கள். கடுமையான நோயால் பாதிக்கப்படாதவர்கள். குடும்ப உறுப்பினர்களில் 80 வயதுக்கு மேற்பட்ட அல்லது கர்ப்பிணிப் பெண்கள் அல்லது எளிதில் நோய்த் தொற்றக்கூடிய ஆபத்து உள்ளவர்கள், நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் ஆகியோரை உங்கள் குடும்பம் கொண்டிருக்கக்கூடாது.
தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்கு ஏற்புடைய வகையில் கழிவறையுடன் கூடிய அறையைக் கொண்டிருக்க வேண்டும்.
பிசிஆர் சோதனைக்குப் பின்
பிசிஆர் பரிசோதனையில் கொவிட்-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டும் வீட்டில் குணமடையும் முறையில் ஈடுபடுவதற்கோ அல்லது பராமரிப்பு நிலையங்களில் குணமடைவதற்கோ தகவல் கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதற்கு தொற்று அதிகரிப்பே காரணம்.
காத்திருப்பு நேரம்
இதுபோன்ற காத்திருப்பு நேரங்களில் நீங்கள் உங்களை உங்கள் வீட்டில் கழிவறை உள்ள ஓர் அறையில் தனிமைப்படுத்திக்கொள்ளவேண்டும். அந்த அறையை விட்டு வெளியில் வரும்போது முகக்கவசம் அணிந்துகொள்ளுங்கள்.
வீட்டில் குணமடையும் முறையைக் கடைப்பிடிப்பவர்கள் அந்த சமயத்தில் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்த குறுந்தகவல்கள் பெறுவார்கள்.
அப்போது உடல்நலம் பாதிக்கப்பட்டால் தொலைபேசி மூலம் மருந்துச்சேவை வழங்குவோரை தொடர்புகொள்ளலாம். அல்லது https://go.gov.sg/telemedicineproviders இந்த இணையத்தளத்திற்குச் சென்று மேல் விவரங்களைப் பெறலாம்.
தனிமைப்படுத்தலுக்கு பதிவு செய்ய
தொற்று பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்வதற்கு https://go.gov.sg/quarantinereg இந்த இணையத் தளத்தில் தங்களைப் பதிவுசெய்து கொள்ளவேண்டும். பதிவுசெய்த பின்னர் அவர்களுக்கு மின் தனிமைப்படுத்தல் ஆணை விதிக்கப்படும். அதன்படி அவர்கள் 10 நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இல்லப் பராமரிப்புப் பொட்டலம்
ஆக்ஸிமீட்டர் இல்லாதவர்களுக்கு மட்டும் இந்த இல்லப் பராமரிப்புப் பொட்டலாம் அனுப்பி வைக்கப்படும். சுகாதார அமைச்சு இந்தப் பொட்டலத்தை, தொடர்பில்லாத பாதுகாப்பான முறையில் உங்களுக்கு அனுப்பிவைக்கும்.
அத்தியாவசிய பொருட்கள்
சமையலுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள், உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை இணையம் வழி பெறுவதற்கு வலியுறுத்தப்படுகிறார்கள். அதேபோல் மருந்துகளை வாங்குவதற்கும் டெலிமெடிசின் சேவையைப் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். மருந்து தேவைப்பட்டால் அந்தச் சேவை மூலம் அவர்களுக்கு மருந்து அனுப்பி வைக்கப்படும்.
பரிசோதனைக் கருவி
பரிசோதனைக் கருவிகள் முடிந்துவிட்டால் அதுபற்றி கவலை வேண்டாம். ஏனெனில் இல்லத்தில் குணமடையும் முறையைக் கடைப்பிடிப்பவர்கள் இதுபோன்ற பரிசோதனை செய்துகொள்ள வேண்டியதில்லை.
அறிகுறி தென்பட்டால்
காய்ச்சல், மூச்சுத் திணறல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், தலைவலி, தசை வலி, சோர்வு, வயிற்றுப்போக்கு ஆகிய அறிகுறி ஏற்பட்டால், டெலிமெடிசின் சேவை வழங்குவோரைத் தொடர்புகொள்ளவேண்டும்.
குணமடைந்த பின்
இல்லத்தில் குணமடையும் முறையைக் கடைப்பிடித்து குணமடைவோருக்கு குணமடைந்ததற்கான சான்றிதழ் எதுவும் தேவையில்லை. பாதிக்கப்பட்டவர் நலமாக உணர்ந்தால், 10வது நாள் தங்களைக் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவித்துக்கொள்ளலாம். அப்போது பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ளத் தேவையில்லை.

