'தொற்றுக்கு எதிரான நடவடிக்கை ஒரு போரைப் போன்றது'
தொற்று அதிகரிப்பதை அடுத்து மருத்துவமனைகள், அதிகமான நோயாளிகளைச் சமாளிக்கும் வகையில் போதுமான இடத்தையும் திறனையும் கொண்டுள்ளனவா என்பது குறித்து அரசாங்கம் கண்காணித்து வருவதாக சுகாதார அமைச்சர் ஓங் யி காங் நேற்று முன்தினம் தெரிவித்தார். மோசமான தொற்றுச்சூழல் உருவாகும் நிலை ஏற்பட்டால் மேலும் அதிகமான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார். சிங்கப்பூரில் தொற்றுக்கு எதிரான கட்டுப்பாடுகள் நடப்பில் உள்ளன. இருப்பினும் தொற்றைக் கட்டுப்படுத்த கடைசி முயற்சியாக மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று தெரிவித்தார். கட்டுப்பாடுகள் நடப்பில் இருந்தாலும் அதிவேகமாகப் பரவக்கூடிய டெல்டா வகைக் கிருமி பரவுவது தொடர்ந்துகொண்டுதான் உள்ளது. அதனால்தான் இப்போது அன்றாடத்தொற்று எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது என்று அவர் கூறினார்.
"அன்றாடத்தொற்று எண்ணிக்கை 100 முதல் 200க்குள் பதிவாகும் நிலை ஏற்பட்டால் படிப்படியாக கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து முன்னதாக திட்டமிடப்பட்டது. ஆனால், அதற்காக டெல்டா வகைக் கிருமி காத்திருக்கவில்லை. டெல்டா வகைக் கிருமிக்கு எதிரான போராட்டம் ஒரு போரைப் போன்றது என்று கூறினார்.
பூஸ்டர் தடுப்பூசியைப் போடுமாறு மூத்தோருக்கு அதிபர் வலியுறுத்து
கொவிட்-19 பூஸ்டர் தடுப்பூசியை நேற்று முன்தினம் போட்டுக்கொண்ட அதிபர் ஹலிமா யாக்கோப், மூத்தோரை பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார். தமது ஃபேஸ்புக் பக்கத்தில் மேற்கண்டதைப் பதிவிட்ட அதிபர், பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொள்வது மூத்தோருக்கு அதிக பாதுகாப்பைத் தரும் என்று கூறியுள்ளார். 60 வயதுக்கு மேற்பட்ட மூத்தோருக்கு கொவிட்-19 கிருமித் தொற்று ஏற்பட்டால், கூடுதல் உயிர்வாயு அல்லது தீவிர சிகிச்சை தேவைப்படக்கூடும். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினர்களை பூஸ்டர் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள ஊக்குவிக்கும்படி அனைவருக்கும் நினைவூட்டினார் அதிபர்.
கவிமாலையில் கவிஞர் கடற்கரை
சிங்கப்பூர் கவிஞர்கள், கவிதை ஆர்வலர்களுடன் கவிமாலை அமைப்பு ஒவ்வொரு மாதம் கடைசி சனிக் கிழமை மாதாந்திரச் சந்திப்பினை நடத்தி வருகிறது. அந்த வகையில் 256வது சந்திப்பு நாளை சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு ஸூம் செயலி வழியாக நடைபெற விருக்கிறது. 'தமிழகம் அறிந்த பத்திரிக்கையாளரும் எழுத்தாளரும் ஆய்வாளாருமான கவிஞர் கடற்கரை 'காசி முதல் கடையம் வரை' எனும் தலைப்பில் சிறப்புரையாற்ற விருக்கிறார். சிறப்பு அங்கமாக பாரதி நூற்றாண்டினை முன்னிட்டு 'பாடிக் கொடுத்த பாரதி' எனும் தலைப்பில் சிறப்பு கவியரங்கம் நடைபெறவிருக்கிறது. கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோவின் தலைமையில் கவிமாலை கவிஞர்கள் அருள்ராஜ், சியாம் குமார், பானு சுரேஷ், தேன்மொழி அசோக், ஜோசப் சேவியர், அஷ்ரப் ஆகியோர் கவிபாடவிருக்கிறார்கள். தொடர்ந்து, 'சலசலக்கும் சருகுகள்' எனும் தலைப்பிலான இம்மாதக் கவிதைப் போட்டி, பரிசளிப்பு மற்றும் கலந்துரையாடல் அங்கமும் உண்டு. இணையம் வழி நடைபெறும் இந்த நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம். ஸூம் செயலி எண்: 950 6384 0830; Passcode: 585863.

