சிங்கப்பூர் முழுவதிலும் உள்ள 40 உணவங்காடி நிலையங்களில் உணவுக்கடை நடத்துவோர் மின்னிலக்கமயமாகி தொழிலைப் பெருக்க உதவும் இரண்டு முன்னோடித் திட்டங்கள் நடப்புக்கு வருகின்றன.
அந்தக் கடைக்காரர்கள் சொந்த ஃபேஸ்புக் பக்கங்களை ஏற்படுத்திக்கொள்ளலாம். அவற்றின் வழி மக்களும் நிறுவனங்களும் சேர்ந்து குழுவாக அவர்களிடம் இருந்து உணவை வாங்க வழி இருக்கும்.
அங்காடி நிலையங்களுக்கான மின்னிலக்க ஆதரவுக் குழுக்கள் வரும் அக்டோபர் முதல் டிசம்பர் மாதத்திற்குள் அமைக்கப்படும்.
அங்காடிக் கடைக்காரர்களில் மேலும் பலர் மின்னிலக்கமயமாவதற்கு ஏதுவாக இத்திட்டங்கள் இடம்பெறுகின்றன.
உணவைக் கேட்ட இடங் களுக்குக் கொண்டு கொடுக்கும் தொழிலில் ஈடுபட்டுள்ள பல்வேறு இணையத்தளங்களும் சேர்ந்து 14 உணவங்காடி நிலையங்களில் 'பொதுக் கொள்முதல்காரர்' என்ற முன்னோடித் திட்டத்தை ஆறு மாத காலம் பரிசோதித்துப் பார்க்கும்.
இந்தத் திட்டத்தின்படி, பயனீட்டாளர்கள் பல கடைகளிலும் கிடைக்கும் பல உணவு வகைகளை கலந்து மொத்தமாக வாங்கலாம். அவற்றை எல்லாம் சேர்த்து ஏற்பாடு செய்து தர 'பொது அங்காடிக்கடை பிரமுகர்கள்' என்பவர்கள் உதவுவார்கள். இவர்கள் கடைகளுடன் நேரடித் தொடர்பில் இருப்பார்கள்.
இந்த முன்னோடித் திட்டங்களை 'எஸ்ஜிடுகெதர் அங்காடிக் கடைக்காரர்களுக்கான இணையத் தரு விப்பு ஆணை பணிக்குழு' என்ற அமைப்பு நேற்று அறிவித்தது.
இந்தக் குழு கடந்த ஜூன் மாதம் அமைக்கப்பட்டது.
கொவிட்-19 காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மின்னிலக்கமயமானால் பல நன்மைகளை அடையலாம் என்பதை எடுத்துச் சொல்லி புரியவைத்து இணையம் வழி தொழிலைப் பெருக்க அவர்களுக்கு உதவுவது குழுவின் நோக்கம்.
'அங்காடிக் கடைக்காரர்களுக்கான மின்னிலக்க ஆதரவு' என்ற முன்னோடித் திட்டத்தில் தியோங் பாரு சந்தை, புளோக் 51 ஓல்டு ஏர்போர்ட் ரோடு, சொங் பாங் சந்தை, உணவு நிலையம் ஆகியவற்றில் செயல்படும் 30 அங்காடி நிலையங்கள் உள்ளடங்கும்.
'பொதுக் கொள்முதல்காரர்' முன்னோடித் திட்டத்தில் சோம்ப் சோம்ப் உணவங்காடி நிலையம், சியோன் ரிவர்சைட் உணவங்காடி நிலையம், தாமான் ஜூரோங் சந்தை, உணவு நிலையம் ஆகியவை ஈடுபடும். ஏபிசி பிரிக்வொர்க்ஸ் சந்தை, உணவு நிலையம், ஆமோய் ஸ்திரீட் உணவு நிலையம், சைனாடவுன் சந்தை, கோல்டன்மைல் உணவு நிலையம் ஆகியவை இரு திட்டங்களிலும் உள்ளடக்கப்படும்.