செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
1e574273-ca80-49a3-ab46-16de19d3298c
-

உலகமயம் நல்லது:

83 விழுக்காட்டினர் கருத்து

பொருளியலுக்கு உலகமயமாக்கம் நல்லது என்று 83% சிங்கப்பூரர்கள் நம்புகிறார்கள். கொள்கை ஆய்வுக் கழகம் நடத்திய ஆய்வு மூலம் இது தெரியவந்துள்ளது.

அதேவேளையில், வெளிநாட்டில் இருந்து வருவோர் தங்கள் வேலைகளை எடுத்துக்கொள்ளக்கூடும் என்று தாங்கள் நம்புவதாக ஆய்வில் கலந்துகொண்டவர்களில் பாதிக்கும் அதிகமானவர்கள் தெரிவித்து உள்ளனர்.

அந்த ஆய்வு 2,001 சிங்கப்பூரர்களையும் நிரந்தரவாசி களையும் உள்ளடக்கி சென்ற ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கும் நவம்பர் மாதத்திற்கும் இடையில் நடத்தப்பட்டது.

'சிங்கப்பூரில் தேசிய தனித்தன்மை: சிங்கப்பூரர்களின் தேசிய பெருமையையும் அடையாளத்தையும் புரிந்து கொள்வது' என்ற தலைப்பிலான அந்த ஆய்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.

உலகமயமாக்கம், குடிநுழைவு பற்றிய தகவல்கள் பலரிடம் இருந்தும் திரட்டப்பட்டன. பொதுவாக உலகமய மாக்கம் சிங்கப்பூரர்களுக்கும் பொருளியலுக்கும் நன்மை பயக்கிறது என்று 83 விழுக்காட்டினர் நம்பிக்கை தெரிவித்தனர். இருந்தாலும் உலகமயமாக்கம் காரணமாக வெளிநாட்டினரும் பணக்காரர்களும் நன்மை அடைகிறார்கள் என்று 17 விழுக்காட்டினர் கூறினர்.

குடிநுழைவைப் பொறுத்தவரை, வெளிநாட்டினர் பொருளியலுக்கு ஊக்கம் அளிப்பதாக 75 விழுக்காட்டினர் ஒப்புக்கொண்டனர்.

புதிதாக இங்கு வருவோர் புதிய யோசனைகளையும் கலாசாரத்தையும் கொண்டு வருவதாக 62% கூறினர். வெளிநாட்டினர் சிங்கப்பூரர்களிடம் இருந்து வேலைகளை பறித்துக்கொள்வதாக 50% தெரிவித்தனர்.

வெளிநாட்டினருக்கு உதவ அளவுக்கு அதிகமாக அரசாங்கம் செலவிடுகிறது என்று நம்புவதாக 53% கூறினர். சமூக பொருளியலைப் பொறுத்தவரை, கீழ்மட்டத்தில் உள்ள, அவ்வளவாக படித்திராதவர் களிடையே இத்தகைய உணர்வு அதிகமாக இருக்கக்கூடும் என்பது ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சிங்டெல் பங்கு கொள்முதல்

இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்த ஆண்டு அக்டோபர் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 21ஆம் தேதிக்குள் உரிமைப் பங்குகளை வெளியிடுகிறது.

நிதி திரட்டும் ஒரு நடவடிக்கையாக அந்தப் பங்குகளை வெளியிட ஆகஸ்ட் 29ஆம் தேதி ஏர்டெல் நிர்வாக சபை அனுமதி வழங்கியது. என்றாலும் அந்த வெளியீடுக்கு ஒழுங்குமுறை அமைப்பின் அங்கீகாரம் தேவை.

பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனம் 14 விழுக்காட்டு பங்கைக் கொண்டுள்ளது.

இதன்படி சிங்டெல் நிறுவனத்திற்குப் பல உரிமைகள் இருக்கின்றன. அந்த உரிமைகளை முற்றிலும் பயன்படுத்திக்கொண்டு பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் உரிமைப் பங்குகளை வாங்க விரும்புவதாக சிங்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிடும் உரிமைப் பங்குகளின் மதிப்பு 21,000 கோடி ரூபாயாக இருக்கும்.

அவற்றில் ஒரு பங்கு 535 ரூபாய் என்ற விலைக்கு மொத்தம் 29.4 பில்லியன் ரூபாய் அல்லது US$405 மில்லியன் கொடுத்து மூன்று ஆண்டு காலத்தில் பங்குகளை வாங்க சிங்டெல் திட்டமிடுகிறது.

இந்த விவரங்களை ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் சிங்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவிலும் ஏர்டெல் நிறுவனத்தின் வளர்ச்சி வாய்ப்புகளிலும் தான் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த முதலீடு புலப்படுத்துவதாக சிங்டெல் குறிப்பிட்டுள்ளது.

உரிமைப் பங்குகளை வெளியிட்டு அதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் திரட்டும் நிதி, 5ஜி கட்டமைப்பில் அந்த நிறுவனம் முதலீடு செய்ய வழியை ஏற்படுத்தித் தரும் என்றும் இந்தியாவில் மின்னிலக்க முயற்சிகளுக்கு அதனால் ஊக்கம் கிடைக்கும் என்றும் தான் நம்புவதாக வும் சிங்டெல் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்பக்கழகப் பட்டதாரிகளில் 95%க்கு வேலை

சிங்கப்பூர் தொழில்நுட்பக்கழகத்தில் படித்து சென்ற ஆண்டில் பட்டம் பெற்று வெளிவந்த மாணவர்களில் மொத்தம் 95% வேலையில் அமர்ந்தனர்.

கொவிட்-19 தொற்று காலத்திலும் அவர்களுக்கு வேலை கிடைத்தது. எஸ்ஜி யுனைடெட் பயிற்சிப் படிப்பு செயல்திட்டத்தில் சேர்ந்தவர்களும் அவர்களில் அடங்குவர். சிங்கப்பூர் தொழில்நுட்பக்கழக பட்டதாரி களுக்குச் சம்பளமும் அதிகமாகக் கிடைத்தது. கணினி அறிவியல் துறையைச் சேர்ந்த பட்டதாரிகளின் மாத சராசரி மொத்த சம்பளம் $5,000 ஆக இருந்தது.

இது 2019ல் $4,200 என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வேலை விவர ஆய்வு முடிவுகள் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியிப்பட்டன.

சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகம் ஏழாவது ஆண்டாக நடத்திய அந்த வருடாந்திர வேலை நியமன ஆய்வில் மொத்தம் 1,882 பேர் அல்லது பட்டம் பெற்ற 2,172 பேரில் 86.6 விழுக்காட்டினர் கடந்துகொண்டனர்.