கொவிட்-19 காரணமாக மின்னிலக்கமயம் வேகம் பிடிக்கிறது. இந்தச் சூழலில் சிறிய, நடுத்தர நிறுவனங்கள் இணையத்தில் வலுவாக இடம்பெற மேலும் உதவிகள் கிடைக்கவிருக்கின்றன.
வர்த்தக, தொழில், கலாசார, சமூக, இளையர்துறை துணை அமைச்சர் திருவாட்டி லோ யென் லிங் நேற்று இதனை அறிவித்தார்.
மின்னிலக்கத் தீர்வுகளை உருவாக்க ஆகும் செலவில் 80 விழுக்காடு வரை ஈடுசெய்யக்கூடிய உற்பத்தித்திறன் தீர்வு மானியம் என்ற திட்டம், மின்னிலக்கச் சந்தைத் தீர்வுகளை உள்ளடக்கும் வகையில் அக்டோபர் முதல் விரிவுபடுத்தப்படும்.
இந்த மானியத்தைப் பயன்படுத்திக்கொண்டு சிறிய, நடுத்தர நிறுவனங்கள் மின்னிலக்கச் சந்தை உத்திகளை உருவாக்கலாம்.
மின்னிலக்கச் சந்தை இயக்கங்களை மேற்கொண்டு தங்களுடைய தொழிலுக்கு ஆதரவு பெறலாம்.
இணையத்தில் வாடிக்கையாளர்களின் வளத்தை அவை உருவாக்கிக் கொள்ளலாம் என்று மெய்நிகர் ரீதியில் நடந்த வருடாந்திர சிறிய, நடுத்தர நிறுவன நிலையத்தில் நடந்த மாநாட்டில் உரையாற்றியபோது திருவாட்டி லோ கூறினார்.
மின்னிலக்கமயமாவதன் காரணமாக சிறிய, நடுத்தர நிறுவனங்கள் புதிய வளர்ச்சி வாய்ப்புகளையும் சந்தைகளையும் பற்றிக்கொண்டு இப்போது இருப்பதைவிட இன்னும் ஆற்றலுடன் திகழ முடியும் என்று அவர் தெரிவித்தார்.
சிங்கப்பூரில் 12 சிறிய, நடுத்தர உதவி நிலையங்கள் உள்ளன.
நிறுவனங்கள் அந்த நிலையங்களுடன் முன்பதிவு செய்துகொண்டு இந்த மானியம் பற்றி மேல் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம் என்றும் துணை அமைச்சர் தெரிவித்தார். சிறிய, நடுத்தர நிறுவன நிலையங்களை என்டர்பிரைஸ் சிங்கப்பூர் அமைப்பும் ஐந்து தொழிற்சங்கங்களும் தொழிற் சபைகளும் நடத்துகின்றன.
தொழிலைப் பெருக்குவதற்கு உகந்த சூழலை தெரிவிப்பது, ஆலோசனை சேவைகளை வழங்குவது, பயிலரங்குகளை நடத்துவது, குழு அடிப்படையிலான மேம்பாட்டுத் திட்டங்களை மேற்கொள்வது ஆகியவை போன்ற உதவிகளைச் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு அந்த நிலையங்கள் செய்து வருகின்றன.
அவை இந்த ஆண்டில் இதுவரை 20,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு உதவி உள்ளன.
சிறிய, நடுத்தர நிறுவனங்களின் தேவைகளுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் அந்த நிலையங்கள் மேலும் மேம்படுத்தப்படும் என்று திருவாட்டி லோ குறிப்பிட்டார்.
சிறிய, நடுத்தர நிறுவனங்கள் தங்களுடைய நிதி வளங்களை எப்படி நிர்வகிக்க முடியும் என்பது தொடர்பான உதவிகளையும் அந்த நிலையங்களில் பெறலாம்.
அந்த நிலையங்கள் ஒளிமயமான சிறிய, நடுத்தர நிறுவனங்களுடன் அணுக்கமாகச் சேர்ந்து செயல்பட்டு வளர்ச்சி வழிகாட்டித் திட்டங்களை உருவாக்கி அல்லது நடைமுறைப்படுத்தி வருவதாகவும் திருவாட்டி லோ தெரிவித்தார்.

