430,000 வெள்ளி மோசடி செய்ததாகக் குற்றச்சாட்டு
தனது வங்கிக் கணக்கிற்கு மொத்தம் 430,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை அனுப்ப வைத்து 13 பேரை ஏமாற்றியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. சட்டவிரோதமான செயல்களின் பலன்களை அனுபவித்ததன் தொடர்பிலும் உரிமமின்றி மற்ற நாடுகளுக்கும் பகுதிகளுக்கும் பணம் அனுப்பும் சேவைகளை வழங்கியதன் தொடர்பிலும் 39 வயது சிங்கப்பூரரான டான் ஷிச்சியேன் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதிக்கும் நவம்பர் மாதம் 24ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் மோசடிக்கு ஆளான 13 பேர் புகார் தந்ததாகப் போலிசார் தெரிவித்தனர்.
கைச் சுத்திகரிப்பானை சக ஊழியரின் போத்தலில் ஊற்றிய குற்றம்
சக ஊழியரின் தண்ணீர் போத்தலில் கை சுத்திகரிப்பானை ஊற்றிய குற்றத்திற்காக 49 வயது திலிப் குமார் கோபிந்த் (படம்) எனும் பாதுகாவலருக்கு 4,500 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சக ஊழியர் அதிகம் வம்பு பேசியதால் கோபமடைந்த சிங்கப்பூரரான திலிப் அவ்வாறு செய்தார். பிடோக்கில் உள்ள ஒரு தனியார் கூட்டுரிமை வீட்டு வளாகத்தில் அவர் வேலை செய்துகொண்டிருந்தபோது இச்சம்பவம் நிகழ்ந்தது.
கைச் சுத்திகரிப்பான் கலந்த நீரைக் குடித்த பிறகு பாதிக்கப்பட்ட 54 வயது பெண்ணின் தொண்டையில் வலியும் தொந்தரவும் ஏற்பட்டது. அபாயம் விளைவிக்கக்கூடிய பொருளைக் கொண்டு முன்யோசனையின்றி பிறருக்கு காயம் ஏற்படுத்தும் சாத்தியம் அதிகம் உள்ள செயலைச் செய்ததாகப் பதிவான குற்றச்சாட்டை திலிப் ஒப்புக்கொண்டார்.
துவாஸ் வெடிப்பு: மாண்ட ஊழியரிடம் அலட்சியமாக பேசிய முதலாளி
மூவரைப் பலிவாங்கிய துவாஸ் வெடிப்பை விளைவித்த இயந்திரத்திலிருந்து கசிவு ஏற்பட்டதாக ஊழியர்கள் எச்சரித்திருக்கின்றனர். ஆனால் அவர்களின் முதலாளியான திரு சுவா சிங் டா அதைச் சிறிய பிரச்சினையாகப் பார்த்தது தெரியவந்துள்ளது. இயந்திரம் தீப்பிடித்துக்கொண்டபோதும் அது அபாயகரமான நிகழ்வு இல்லை என்று அச்சம் கொண்ட ஓர் ஊழியரை நம்பவைக்கவும் அவர் முயற்சி செய்திருக்கிறார்.
அந்த ஊழியர் வெடிப்பில் உயிரழந்தோரில் ஒருவர். ஸ்டார்ஸ் எஞ்சினியரிங் நிறுவனத்தின் ஒேர இயக்குநரும் பங்குதாரருமான 37 வயது திரு சுவா, விசாரணைக் குழுவின் முன் சாட்சியம் அளித்தார்.
கடந்த பிப்ரவரி மாதம் 24ஆம் தேதியன்று 32இ துவாஸ் அவென்யூவில் உள்ள தொழில்துறைக் கட்டடத்தில் நேர்ந்த வெடிப்பில் 10 ஊழியர்கள் காயமடைந்தனர். அவர்களில் எட்டு பேர் ஸ்டார்ஸ் எஞ்சினியரிங் நிறுவனத்தின் ஊழியர்கள். மூவர் மாண்டனர்.
ஓராண்டுக்கு மேல் பணிப்பெண்ணுக்கு சம்பளம் தராத குற்றச்சாட்டு
தனது பணிப்பெண்ணுக்கு 13 மாதங்களுக்குச் சம்பளம் தரவில்லை என ஒரு பெண் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இடைப்பட்ட காலத்தில் சிங்கப்பூரரான 56 வயது சேன்டா மரியா மிஷெல் தரேசா அவ்வாறு செய்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.
அவரது பணிப்பெண்ணான பிலிப்பீன்சைச் சேர்ந்த 43 வயது எம்ஃபெராட்ரிஸ் பொர்ஷா மொன்டெஃபொல்காவின் மாதச் சம்பளம் 500 வெள்ளி. 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கும் 2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்கும் இடையே தகுந்த வேலை உரிமமின்றி மொன்டெஃபொல்கா 48 வயது சிங்கப்பூரரான நொர்லிசா கமாருதீனின் வீட்டில் பகுதிநேரமாக வேலை செய்ததாகவும் சந்தேகிக்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது. உரிமமின்றி பணிப்பெண்ணை வேலைக்கு எடுத்ததாக நொர்லிசா மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. தகுந்த வேலை உரிமமின்றி வேலை செய்ததாக மொன்டெஃபொல்கா மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

