சிங்கப்பூர் ஆயுதப் படை மேற்கொண்டுவரும் ஆகச் சிக்கலான, உயர்தர வெளிநாட்டுப் பயிற்சிகளில் ஒன்றான 'எக்சர்சைஸ் ஃபோர்ஜிங் சேபர்' தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
ஈராண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் உண்மையான குண்டுகளைக் கொண்டு நடத்தப்படும் இந்தத் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சி அமெரிக்காவின் இடாஹோ மாநிலத்தில் உள்ள மௌன்டன் ஹோம் ஆகாயப் படைத் தளத்தில் நடந்து வருகிறது.
பயிற்சியில் பல்வேறு புதிய ராணுவ தளவாடங்களும் தளபத்தியமும் இடம்பெற்றுள்ளன. 2005ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இப்பயிற்சி தற்போது எட்டாவது முறையாக நடைபெறுகிறது. சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையைச் சேர்ந்த 600 வீரர்களும் சிங்கப்பூர் ராணுவத்தைச் சேர்ந்த 200 வீரர்களும் இதில் பங்கேற்கின்றனர்.
கொவிட்-19 கொள்ளை நோய்ப் பரவல் சூழல் எழுந்த பிறகு இதுவே சிங்கப்பூர் ஆயுதப் படை மேற்கொண்டிருக்கும் முதல் வெளிநாட்டுப் பயிற்சி.
மெளன்டன் ஹோமில் உள்ள ஆகாயப் படைப் பயிற்சிப் பகுதியின் பரப்பளவு, சிங்கப்பூரின் பரப்பளவில் 20 மடங்கிற்கும் அதிகம்.
அதனால் பெரிய அளவிலான உண்மையான சூழலுக்குப் பொருந்தும் வகையில் சிங்கப்பூர் ஆயுதப் படையால் அங்கு பயிற்சிகளை நடத்தமுடியும் எனத் தற்காப்பு அமைச்சு கூறியது.
இதன் மூலம் சிங்கப்பூர் தற்காப்பை உயர் தயார் நிலையில் வைத்திருக்கமுடியும் என்று அமைச்சு குறிப்பிட்டது.
இம்மாதம் 14ஆம் தேதியன்று தொடங்கிய பயிற்சி நாளை நிறைவடையும்.
செயற்கை நுண்ணறிவு
பயிற்சியில் செயற்கை நுண்ணறிவு, 'டேட்டா எனலிட்டிக்ஸ்' எனப்படும் தரவு ஆய்வு முறை அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.
மாறிவரும் சூழல்களுக்கேற்ப வீரர்களுக்கு தீர்வுகளை வழங்கும் புதிய மென்பொருள் முறை இவ்வாண்டு அறிமுகம் கண்டுள்ளது. இது, சுடவேண்டிய குறிகளுக்கு எத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தவேண்டும் போன்ற ஆலோசனைகளை வீரர்களுக்கு வழங்கும். இந்த மேம்படுத்தப்பட்ட 'சிசிஐஎஸ்' எனப்படும் ஆணை, தகவல் முறை 'எக்சர்சைஸ் ஃபோர்ஜிங் சேபர்' பயிற்சியில் பயன்படுத்தப்படுகிறது.
தெளிவான முடிவுகளை வேகமாக எடுக்க தளபதிகளுக்கு உதவுவது முறையைப் பயன்படுத்துவதன் நோக்கம் என்று சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படை கூறியது.
இந்த முறையை சூழலுக்கேற்ப மாற்றியமைக்கமுடியும் என்றும் இது வருங்காலத்திற்கு உகந்த ஒன்று என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

