உள்ளூர் ஊழியர்களின் ஊதியத்திற்கு சலுகைகளை அளித்து அவர்களை அதிக எண்ணிக்கையில் ஆள்சேர்க்கும் திட்டம் மேலும் ஆறு மாதங்களுக்கு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்படும் என்று மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
வேலை வளர்ச்சி ஆதாயத்திட்டம், மே மாத நிலவரப்படி இதுவரை 400,000 சிங்கப்பூரர்களை 58,000 நிறுவனங்கள் வேலையில் அமர்த்தியதை ஆதரித்துள்ளது. கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு இடையே கடந்தாண்டு அறிமுகம் செய்யப்பட்டது இந்தத் திட்டம்.
இந்தத் திட்டத்தின் அடுத்த கட்டத்திற்கான தகுதி காலக்கட்டம் அக்டோபர் முதல் மார்ச் வரை நீடிக்கும். ஊழியர் சந்தை மேம்படும்போது கூடுதல் சிங்கப்பூரர்களைப் பணியில் அமர்த்த இந்தத்திட்டம் கைகொடுக்கும். நிலைமை மேம்பட உதவிகள் குறைந்து வரும். அக்டோபர் முதல், தகுதிபெறும் முதலாளிகளுக்கு, அடுத்த ஆறு மாதங்களுக்கு முதல் 5000 வெள்ளிக்கு 15 விழுக்காடு ஆதரவு அளிக்கும். இது, நாற்பது வயதுக்கும் குறைவானோருக்கான 4,500 வெள்ளியைக் காட்டிலும் குறைவு.
நாற்பது வயதுக்கும் மேற்பட்டோர், உடல் குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கான ஆதரவு முதல் 6,000 வெள்ளிக்கு 50 விழுக்காடு அதிகரிக்கும்.

