1,600 தீவிர சிகிச்சை படுக்கைகளுக்கு திட்டம்

1,600 தீவிர சிகிச்சை படுக்கைகளுக்கு திட்டம்

2 mins read
c388c025-c256-42c8-9732-bf878fc90ca2
-

கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்­குத் தேவைப்­படும் பட்­சத்­தில் 1,600 தீவிர சிகிச்சை பிரிவு படுக்­கை­களைக் கொண்­டி­ருப்­ப­தற்­கான திட்­டங்­களை அதி­கா­ரி­கள் வகுத்து வரு­கி­றார்­கள்.

ஏற்­கெ­னவே இத்­த­கைய 1,000 படுக்­கை­க­ளுக்குத் திட்­ட­மி­டப்­பட்­டது. அதி­க­மான படுக்­கை­களை உரு­வாக்­கும் முயற்­சி­கள் கார­ண­மாக வழக்­க­மான சேவை­களில் கொஞ்­சம் பாதிப்பு இருக்­கும்.

ஆகை­யால் சில குறிப்­பிட்ட நடை­மு­றை­களை ஒத்­தி­வைக்க வேண்டி இருக்­கும் என்று சுகாதார அமைச்­சர் ஓங் யி காங் தெரி­வித்­தார். பல அமைச்­சு­களை உள்­ள­டக்­கிய கொவிட்-19 சிறப்­புப் பணிக்­கு­ழு­வின் செய்­தி­யா­ளர் கூட்­டம் நேற்று நடந்­தது. அதில் அமைச்­சர் பேசி­னார்.

மருத்­து­வ­ம­னை­கள் வரு­கை­யா­ளர்­களுக்கு நான்கு வார காலம் தடை விதித்து இருக்­கின்­றன.

சமூ­கப் பரா­ம­ரிப்பு நிலை­யங்­களில் படுக்­கை­களின் எண்­ணிக்கையை விரைவில் 4,600 ஆக அமைச்சு கூட்­டும்.

இப்­போது இந்த எண்­ணிக்கை 3,500 ஆக இருக்­கிறது.

இவை ஒரு­பு­றம் இருக்க, புதிய வகை சமூக சிகிச்சை நிலை­யங்­களை அர­சாங்­கம் தொடங்கி இருக்­கிறது.

இத்­த­கைய நிலை­யங்­களில் முற்­றிய நோய்­க­ளு­டன் கூடிய கொவிட்-19 நோயா­ளி­களை அணுக்கமாகக் கண்­கா­ணிக்க சிறப்பு வச­தி­கள் இருக்­கின்­றன. அவர்­களை நன்கு நிர்­வ­கிக்­க­வும் அவற்­றில் வசதி இருக்­கும்.

இத்­த­கைய முதல் நிலை­யம் தெம்­ப­னி­சில் உள்ள என்­டி­யுசி சுகா­தார தாதிமை விடு­தி­யில் நேற்று திறக்­கப்­பட்­டது.

இந்த வாரம் ஏறத்­தாழ 300 சமூக சிகிச்சை நிலைய படுக்கை­களை ஆயத்­தப்­ப­டுத்­தும்­படி ஆணை பிறப்­பிக்கப்பட்டு இருப்ப தாக திரு ஓங் தெரி­வித்­தார்.

வரும் வாரங்­களில் மேலும் 700 படுக்­கை­கள் சாங்கி எக்ஸ்­போ­வில் அமை­யும். செங்­காங் மருத்­து­வ­ம­னை­யில் 200 படுக்கை­கள் தயார் செய்­யப்­படும் என்­றும் அமைச்­சர் குறிப்­பிட்­டார்.

இத்­த­கைய சமூக பரா­ம­ரிப்பு நிலை­யங்­களை நிர்­வ­கித்து நடத்த சிங்­கப்­பூர் ஆயு­தப்­ ப­டை­கள், தனி­யார் துறை மருத்­து­வ­ம­னை­கள் ஆகி­ய­வற்­றின் உத­வியை அமைச்சு நாடு­கிறது.

தீவிர சிகிச்சை பிரி­வில் சென்ற வாரம் 21 பேர் சிகிச்சை பெற்று வந்­த­னர். இந்த எண்­ணிக்கை அதற்கு முதல் வாரத்­தில் 9 பேராக இருந்­தது.

சிங்­கப்­பூர் மருத்­து­வ­ம­னை­கள் ஏறத்­தாழ 300 தீவிர சிகிச்சை படுக்­கை­களை உட­ன­டி­யாக தயார் செய்­து­விட முடி­யும் என்­ப­தால் இப்­போ­தைய தேவை­க­ளுக்குப் போதிய அள­வுக்கு இத்­த­கைய படுக்­கை­கள் இருக்­கின்­றன.

கொவிட்-19 கிருமி தொற்­றி­ய­வர்­களில் ஏறத்­தாழ 40 விழுக்­காட்­டி­னர் இப்­போது வீட்­டி­லேயே குண­ம­டைந்து வரு­கி­றார்­கள்.

ஏறக்­கு­றைய 15 முதல் 20 விழுக்­காட்­டி­னர் மருத்­து­வ­ம­னை­யி­லும் மற்­ற­வர்­கள் சமூக பரா­ம­ரிப்பு நிலை­யங்­க­ளி­லும் குண­மடைந்து வரு­கி­றார்­கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.