சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்கள் இன்னும் அதிகமான உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் வேலை உருவாக்கத்துக்கான ஊக்குவிப்புத் திட்டம் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது என்று மனிதவள அமைச்சு நேற்று தெரிவித்தது.
இத்திட்டத்தின் மூலம் உள்ளூர் ஊழியர்களைப் பணியமர்த்தும் நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் வழங்கும்.
வேலை உருவாக்கத்துக்கான ஊக்குவிப்புத் திட்டம் மூலம் இவ்வாண்டு மே மாதம் வரையிலான தகவல்படி, 58,000 நிறுவனங்கள் 400,000 உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளன.
இந்த கொவிட்-19 பெருந்தொற்று காலத்தில் அதிகமான உள்ளூர் ஊழியர்களை நிறுவனங்கள் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் வகையில் வேலை உருவாக்கத்துக்கான ஊக்குவிப்புத் திட்டம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
அது இம்மாதம் வரை நீடிக்கும் என முன்னர் அறிவிக்கப்பட்டது. ஆனால், இத்திட்டம் மூலம் அரசாங்கத்தின் உதவி பெறுவதற்கான காலம் அடுத்த மாதம் முதல் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதேவேளையில், நிலைமை மேம்படும்போது இத்திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெறும் உதவியும் சற்று தளர்த்தப்படும்.
தகுதிபெறும் முதலாளிகள் அடுத்த மாதத்திலிருந்து ஊழியர் சம்பளத்தின் முதல் $5,000க்கு 15 விழுக்காடு ஊதிய ஆதரவு பெறுவார்கள். 40 வயதுக்குட்பட்ட உள்ளூர் ஊழியர்களை முதலாளிகள் வேலைக்கு அமர்த்தினால், சம்பளத்தில் முதல் $4,500க்கு 15 விழுக்காடு ஊதிய ஆதரவு கிடைக்கும்.
40 வயதுக்கு மேற்பட்ட முதிர்ச்சியடைந்த உள்ளூர் ஊழியர்கள், உடற்குறையுள்ளோர், முன்னாள் குற்றவாளிகள் ஆகியோரை வேலைக்கு அமரத்தும் முதலாளிகள் 12 மாதங்களுக்கு ஊழியரின் முதல் $6,000க்கு 50% வரை ஆதரவு பெறுவார்கள்.
கண் ஒட்டுவில்லை உற்பத்தி செய்யும் அல்கான் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு நேற்று வருகையளித்தபோது இது குறித்து பேசிய மனிதவள அமைச்சர் டான் சீ லெங், "எதிர்காலத்தில் நிலைமை சரிசமமாக இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகவே, நிலைமையைச் சரிசெய்யவும் உள்ளூர் ஊழியர்களின் வேலை தேடும் முயற்சியில் ஆதரவளிக்கவும் வேலை உருவாக்கத்துக்கான ஊக்குவிப்புத் திட்டம் இன்னும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்படுகிறது.
"இது ஒரு நிரந்தரமான தீர்வு இல்லை. மாறாக, அசாதாரணமான நடவடிக்கை. அந்த வகையில் வர்த்தக வளர்ச்சி திட்டங்களைக் கொண்டுள்ள முதலாளிகள் இந்தத் தகுதி பெறும் காலத்தில் இன்னும் அதிகமான உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்துமாறு கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.
"உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்தும் இத்திட்டத்தை பல துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றன. பத்தில் நான்கு ஊழியர்கள் வளர்ந்து வரும் துறைகளான கொள்முதல் வர்த்தகம், நிபுணத்துவ சேவைகள், தகவல், தொடர்புத் துறைகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளனர்.
"இதற்கிடையே, மீட்சியடைந்துவரும் உணவுச் சேவைகள் மற்றும் சில்லறை விற்பனைத் துறைகளில் பத்தில் ஓர் ஊழியருக்கு வேலை கிடைத்துள்ளது.
"தொடர்ந்து மாறிவரும் சூழலில் ஊழியர்களும் வேலை தேடுவோரும் தொடர்ந்து தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு, கிடைக்கும் வேலை வாய்ப்புகளைப் பற்றிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். எப்போதும் நம்பிக்கையுடன் இருங்கள். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து மேம்பட்ட பலன்களைப் பெற தொடர்ந்து முயற்சி மேற்கொள்வோம்," என்றார் டாக்டர் டான்.

