வர்த்தகங்களுக்கு $650 மி. ஆதரவு
கடுமையான கொவிட்-19 கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டு உள்ள உணவு, பானக் கடைகள், சில்லறை விற்பனை யாளர்கள் போன்ற வர்த்தகங்களுக்கு சம்பளக் கழிவுகள், வாடகைக் கழிவுகள் மற்றும் இதர வகையான ஆதரவு வழங்குவதற்காக அரசாங்கம் $650 மில்லியனை ஒதுக்கி உள்ளது. எதிர்பார்க்கப்பட்டதைக் காட்டிலும் அரசாங்கத் துக்குக் கிடைக்கப்பெற்ற வருவாயிலிருந்து இந்தத் தொகை எடுக்கப்படும் என்றும் இதற்காக அரசாங்கத்தின் நிதி இருப்பிலிருந்து தொகை எடுக்கப்படாது என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அடுத்த திங்கட்கிழமையிலிருந்து அக்டோபர் 24ஆம் தேதி வரை கடுமையான பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கை கள் நீடிக்கும். அதன்படி குழுவாக அமர்ந்து உண்ணுதல் ஐந்து நபரிலிருந்து இருவராகக் குறைக்கப்பட்டுள்ளது.
நேற்று நடைபெற்ற கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக் குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் பேசிய நிதி அமைச்சர் லாரன்ஸ் வோங், "இந்தக் கட்டுப்பாடுகளால் வர்த்தகங்கள் பாதிக்கப்படும் என்பதை அறிவோம். உணவுண்ணும் நபர் எண்ணிக்கை இரண்டாகக் குறைக்கப்படும்போது, உணவு, பானக் கடைகள், சில்லறை விற்பனையாளர்களுக்கு அதன் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆகவேதான், அரசாங்கம் ஆதரவுக் கரம் நீட்டுகிறது," என்றார்.
ஓங்: கொவிட்-19 ஏற்படுத்தியுள்ள
மூன்று நிச்சயமற்ற சூழ்நிலைகள்
கொவிட்-19 பெருந்தொற்றுடன் வாழவேண்டிய இக்கட்டில் நாம் தள்ளப்பட்டிருந்தாலும், அது ஏற்படுத்தியுள்ள மூன்று நிச்சயமற்ற சூழ்நிலைகளையும் நாம் சந்திக்க வேண்டி உள்ளது. கிருமித்தொற்றின் அன்றாட அதிகரிப்பு, மாண்டோர்் எண்ணிக்கை அதிகரிப்பு, மருத்துவமனைகள் வளங்களின் சுமை அதிகரிப்பு ஆகியவையே அவை என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
"கிருமித்தொற்றால் மடிவோரின் எண்ணிக்கையைக் குறைக்க அரசாங்கம் எல்லா முயற்சிகளையும் எடுக்கும். அதனால்தான் மக்கள்தொகையில் பெரும்பகுதியினர் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் சிங்கப்பூர் தனது எல்லைகளை மெல்ல திறந்துவிட்டுள்ளது. ஆக, இந்த அலையை நாம் வேறு விதமாக, பாதுகாப்பாக, வெற்றிகர மாக எதிர்கொள்வோம்," என்று திரு ஓங் நேற்று நடை பெற்ற கொவிட்-19க்கு எதிரான அமைச்சுகள் நிலைப் பணிக் குழுவின் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
வருகையாளர் மருத்துவமனை செல்ல நான்கு வாரத் தடை தொடக்கம்
மருத்துவமனைக்கு வருகையாளர்கள் செல்வதற்கு விதிக்கப்பட்டுள்ள நான்கு வார காலத் தடை தொடங்கி இருக்கிறது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இடம்பெறும் அந்தத் தடையை வருகையாளர்கள் வரவேற்று இருக்கிறார்கள். தடை நேற்று தொடங்கியது.
டான் டோக் செங் மருத்துவமனையில் நேற்றுக் காலை ஓரிரு பார்வையாளர்களை மட்டுமே காண முடிந்தது. அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தங்கள் அன்பர்களைப் பார்க்க அனுமதிக்கப்பட்ட ஒரு சிலரில் அடங்குவர்.
அக்டோபர் 23ஆம் தேதி வரை மருத்துவமனைகளுக்கு வருகையாளர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோசமாகப் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளிகள், குழந்தை பிறந்துள்ள மாதர்கள் போன்றவர்களைப் பார்ப்பதற்கு மட்டும் வருகையாளர்கள் அனுமதிக்கப்படுவர்.
தங்களுக்குத் தொற்று இல்லை என்பதை தெரியப்படுத்தும் விரைவுப் பரிசோதனைக்கு அவர்கள் 24 மணி நேரத் திற்குள் உட்பட்டு இருக்கவேண்டும். வருகையாளர்களுக்கு அனுமதி இல்லை என்பதைத் தெரியப்படுத்தும் அறிவிப்புகள் டான் டோக் செங் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தன.
வாரயிறுதியில் இலவச பரிசோதனை
இன்று முதல் வாரயிறுதி நாட்களில் எட்டு வட்டார பரிசோதனை நிலையங்களிலும் மூன்று விரைவுப் பரிசோதனை நிலையங்களிலும் மூச்சுத்திணறல் அறிகுறி உள்ளவர்கள் இலவசமாக வழங்கப்படும் பிசிஆர் பரிசோதனையைப் பெற்றுக்கொள்ளலாம்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க, பரிசோதனைக்கு முன்பதிவு அவசியம். நேற்று மாலை 6 மணிக்குத் தொடங்கிய முன்பதிவு நாளை பிற்பகல் 3 மணி வரை நீடிக்கும் என்று சுகாதார அமைச்சு கூறியது.
அந்த 11 பரிசோதனை நிலையங்கள் யாவை என்ற தகவல் சுகாதார அமைச்சின் இணையத்தளத்தில் உள்ளது.

