தமிழ் மொழியில் பேச சிரமப்படும் 'அன்னா' என்ற ஒரு சிறுமி, 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த அழகப்பன் என்ற ஒரு திருக்குறள் ஆர்வலரைச் சந்திக்கிறாள்.
இவர்களின் சந்திப்பு அன்னாவின் கண்ணோட்டத்தையும் தமிழ் ஆர்வத்தையும் எப்படி மாற்றியமைக்கிறது என்பதுதான் 'டைம் போனதே தெரியல' என்ற இந்த கேலிச்சித்திர புத்தகத்தின் கதைக் கரு. வித்தியாசமான வரைபடங்கள் நிறைந்த இந்த கேலிச் சித்திர புத்தகத்தை தமிழ் சிறுவர்களுக்காகத் தயாரித்து வெளியிடுகிறது 'தமிழா' என்ற இளையர் அமைப்பு.
திருக்குறளை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த கேலிச் சித்திர புத்தகம், தமிழ் சிறுவர்களிடையே தமிழ் புத்தகங்கள் வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்பதோடு தமிழ்மொழியின் வரலாற்றையும் முக்கியமான முன்னோடிகளையும் முன்னிறுத்துகிறது.
தங்களைப் போன்ற இளைய தலைமுறையினர் தமிழில் ஆர்வம் இருந்தும் அம்மொழியில் பேச தயக்கம் கொள்கின்றனர், அவர்களது தயக்கத்தை அகற்றி தன்னம்பிக்கையை ஊட்ட இந்த கேலிச்சித்திர புத்தகம் ஊக்குவிக்கும் என்று நம்புகிறது 'தமிழா'.
ஸூம் வழி மெய்நிகரில் இன்று பிற்பகல் 2 மணிக்கு நடைபெறவிருக்கும் புத்தக வெளியீட்டில் எழுத்தாளர்கள் கனகலதா, சித்துராஜ் பொன்ராஜ் ஆகியோர் ஒரு கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளனர்.
சிங்கப்பூரின் தமிழ் இலக்கிய சமூகத்தை பற்றிய இளம் எழுத்தாளர்களின் புரிதலை அதிகரிக்கவும் புத்தக வெளியீடுகளின் செயல்முறைகள் பற்றி அவர்களுக்குத் தெரியப்படுத்தவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தப் புத்தக வெளியீட்டில் பங்கேற்க விரும்புவோர், இங்கு பதிவு செய்யலாம்: https://linktr.ee/Tamizha

