உயிர்ப்பலி வேலையிட விபத்துகள் அதிகரிப்பு

உயிர்ப்பலி வேலையிட விபத்துகள் அதிகரிப்பு

3 mins read
e48d1588-652a-4d89-8611-ab59aeae229f
-

சிங்­கப்­பூ­ரில் வேலை­யி­டங்­களில் நிக­ழும் உயிர்ப்பலி விபத்­து­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. இவ்­வாண்­டின் முதல் ஆறு மாதங்­களில் இங்கு 23 வேலை­யிட உயிர்ப்பலி விபத்­து­கள் நிகழ்ந்­துள்­ளன. ஒப்­பு­நோக்க, கடந்த ஆண்டு இதே காலகட்­டத்­தில் வேலை­யிட உயிர்ப்பலி விபத்­து­க­ளின் எண்­ணிக்கை 16ஆக இருந்­தது.

ஆகக் கடை­சி­யாக நேற்று முன்­தி­னம் துவாஸ் அவென்யூ 20ல் உள்ள துவாஸ் எரி­யா­லை­யில் நேற்று முன்­தி­னம் பிற்­ப­கல் 3.15 மணிக்கு நிகழ்ந்த வெடி விபத்­தில் ஒரு­வர் மாண்­டார். இரு­வர் காய­மடைந்­த­னர்.

அந்த மூன்று சிங்­கப்­பூ­ரர்­களும் மின்­சார விசை­ய­றை­யில் பழு­து­பார்ப்­புப் பணி­யில் ஈடு­பட்­டி­ருந்­த­போது, வெடிப்பு நிகழ்ந்­தது என்று மனி­த­வள அமைச்­சின் பேச்­சா­ளர் தெரி­வித்­தார்.

வெடிப்பு சம்­ப­வத்­துக்­குப் பிறகு அந்த எரி­யா­லை­யி­லி­ருந்து சுமார் 80 பேர் அப்­பு­றப்­ப­டுத்­தப்­பட்­ட­னர். அந்­தக் கட்­ட­டத்­தின் முதல் தளத்­தில் உள்ள மின்­சார விசை­ய­றை­யில் புகை சூழ்ந்­தி­ருந்­தது என்­றும் அந்த அறை­யில் உள்ள புகை வெளி­யேற்ற குழா­யின் விசிறி மூலம் தீப் பற்­றி­யி­ருக்­க­லாம் என்று சிங்­கப்­பூர் குடி­மைத் தற்­காப்­புப் படை தெரி­வித்­தது.

வேலை­யிட உயிர்ப்பலி விபத்து ­க­ள் எண்­ணிக்கை அதி­க­ரிப்பு மிகுந்த கவ­லையை அளித்­துள்­ளது என்று மனி­த­வள மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது முன்­னர் கூறி­யி­ருந்­தார்.

உய­ரத்­தி­லி­ருந்து விழுந்தார்

இவ்­வாண்டு ஜூன் 13ஆம் தேதி­யன்று 25 வயது பங்­ளா­தேஷ் ஊழி­யர் ஒரு­வர் உய­ரத்­தி­லி­ருந்து கீழே தவறி விழுந்து மாண்­டார்.

ஒரு கட்­ட­டத்­தின் கட்­டு­மா­னப் பணி நடந்­து­கொண்­டி­ருந்­த­போது கிட்­டத்­தட்ட வீவக புளோக்­கின் 14வது மாடி உய­ரம் அள­வி­லான 40 மீட்­டர் உய­ரத்­தி­லி­ருந்து விழுந்­தார். கட்­ட­டத்­தின் சுவர்­க­ளுக்கு இடையே போடப்­பட்­டி­ருந்த குறு கலான தற்­கா­லிக பாதை­யில் நடந்து சென்­று­கொண்­டி­ருந்­த­போது, அந்­தப் பாதை இணைப்பு உடைந்­தது என்று மனி­த­வள அமைச்சு தெரி­வித்­தது.

தொட்­டிக்­குள் மயங்கி விழுந்­த­னர்

இவ்­வாண்டு மே 19ஆம் தேதி ஒரு கப்­ப­லின் எடை பாரத் தொட்­டிக்­குள் நுழைந்த ஊழி­யர் ஒரு­வ­ரும் அவ­ரது மேல­தி­கா­ரி­யும் அந்­தத் தொட்­டிக்­குள் மயங்கி விழுந்­த­னர். அங்கு போதிய அளவு உயிர்­வாயு இல்­லா­ததே கார­ண­மாக இருக்­க­லாம் என்று கரு­தப்­ப­டு­கிறது.

பாது­காப்பு உப­க­ர­ணம் அணி­யாமல் அந்­தத் தொட்­டி­க்­குள் நுழைந்து மயங்­கிய 21 வயது மேல­தி­கா­ரி­யைக் காப்­பாற்ற அந்­தத் தொட்­டி­க்­குள் இறங்­கிய 37 வயது ஊழி­ய­ரும் மயங்­கி­ விழுந்தார். இரு­ வ­ரைக் காப்­பாற்ற இறங்­கிய மூன்­றா­வது நப­ரான 39 வயது ஊழி­ய­ரும் மயங்­கி­ விழுந்தார். ஆனால், அவர் விரை­ந்து காப்­பாற்­றப்­பட்­ட­தால் உயிர் பிழைத்­தார்.

23ஆம் மாடி­யி­லி­ருந்து விழுந்­தார்

இவ்­வாண்டு ஏப்­ரல் 5ஆம் தேதி, ரிவர் வேலி ரோட்­டில் உள்ள கொண்­டோ­மி­னி­யக் கட்­ட­டத்­தின் 7வது மாடி­யி­லி­ருந்து அறை­க­லன் மற்­றும் மின்­சா­ரச் சாத­னங்­களை அப்­பு­றப்­ப­டுத்­திக்­கொண்­டி­ருந்த 23 வயது சிங்­கப்­பூர் ஊழி­யர், ஏணி­யி­லி­ருந்து கால்­த­வறி விழுந்து மாண்­டார்.

மின்­தூக்கி சுரங்­கத்­தில் சிக்­கி­னார்

இவ்­வாண்டு பிப்­ர­வரி 27ஆம் தேதி­யன்று, நார்த் பிரிட்ஜ் ரோடு கட்­ட­டத்­தில் மின்­தூக்கி பழு­து­பார்ப்பு பணி­யில் ஈடு­பட்ட பங்­ளா­தேஷ் ஊழி­யர் ஒரு­வர், மின்­தூக்கி தண்­ட­வா­ளத்­தில் சிக்கி உய­ரி­ழந்­தார்.

துவாஸ் தொழிற்­கூட வெடிப்பு

இவ்­வாண்டு பிப்­ர­வரி 24ஆம் தேதி­யன்று துவாஸ் ஸ்டார்ஸ் இன்­ஜி­னி­ய­ரிங் தொழிற்­கூட வெடிப்­பில் மூன்று ஊழி­யர்கள் மாண்­ட­னர், பத்து பேர் காய­முற்­ற­னர். இச்­சம்­ப­வம் தொடர்­பி­லான வழக்கு விசா­ரணை தற்­போது நீதி­மன்­றத்­தில் நடந்துக்­கொண்­டி­ருக்­கிறது.

செப்­ப­ணி­டு­த­லின்­போது விபத்து

இவ்­வாண்டு பிப்­ர­வரி 10ஆம் தேதி­யன்று, டன்­னர்ன் ரோட்­டில் உள்ள ஒரு பங்களா வீட்­டில் செப்­ப­ணி­டும் வேலை நடந்­து­கொண்­டி­ருந்­த­போது, அதை மேற்­கொண்ட நிறு­வ­னத்­தின் இயக்­கு­நர் திரு கோ கோக் ஹெங், மாடித் தரை­யில் உள்ள குழி­யில் தவறி விழுந்து மாண்­டார்.

அந்த 53 வயது சிங்­கப்­பூர் நிரந்­த­ர­வாசி இரண்­டாம் மாடி­யி­லி­ருந்து ஐந்து மீட்­டர் உய­ரத்­தி­லி­ருந்து விழுந்­தார்.