சிங்கப்பூரின் தொழிற்சாலை உற்பத்தி ஆகஸ்ட் மாதம் மீண்டும் மெதுவடைந்தது. கொள்ளைநோய் தொடர்பான விநியோகத்தில் இடையூறு எற்பட்டிருப்பதாலும் வெளிப்புறத் தேவை மெதுவடைவதாலும் ஆண்டின் எஞ்சிய பகுதியிலும் இதேபோன்ற நிலவரம் தொடரும் என பொருளியல் நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர்.
உற்பத்தித் துறை வளர்ச்சி ஓராண்டுக்கு முன்பு இருந்ததைக் காட்டிலும் இந்த ஆகஸ்ட் மாதம் 11.2 விழுக்காடு விரிவடைந்தது. இருப்பினும் ஜூலை மாத 16.4 விழுக்காட்டை விட அது குறைவு. உயிர்மருத்துவப் பொருள் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டது ஆகஸ்ட் மாத சரிவுக்குக் காரணம் என நேற்று வெளியிடப்பட்ட தரவு தெரிவித்தது. இருப்பினும் தொடர்ந்து பத்தாவது மாத ஆண்டுக்காண்டு வளர்ச்சி இது. மேலும் புளூம்பெர்க் வாக்கெடுப்பில் பங்கேற்ற பகுப்பாய்வாளர்கள் முன்னுரைத்திருந்த 8.2 விழுக்காடு என்பதைக் காட்டிலும் ஆகஸ்ட் மாத வளர்ச்சி அதிகம்.
உயிர்மருத்துவத் துறை உற்பத்தியை விலக்கிவிட்டுப் பார்த்தால் ஆகஸ்ட் மாத வளர்ச்சி 13.6 விழுக்காடு. பொருளியலுக்கு மிகவும் கைகொடுக்கும் மின்னணுத் துறை 15.4 விழுக்காடு விரிவடைந்தது. கணினி தொடர்பான பொருள் தயாரிப்பு மற்றும் தரவு சேமிப்பு ஆகிய பிரிவுகளைத் தவிர எஞ்சிய எல்லாப் பிரிவுகளிலும் வளர்ச்சி பதிவானது.
குறிப்பாக, பகுதிமின்கடத்திப் பிரிவு 16.8 விழுக்காடு வளர்ச்சி கண்டது. 5ஜி எனப்படும் ஐந்தாம் தலைமுறைச் சந்தையின் தேவை இந்த வளர்ச்சிக்குக் கைகொடுத்தது. இருந்தபோதிலும் கணினிச் சில்லு உற்பத்தி நிலவரம் மீது நிபுணர்கள் அவ்வளவாக நம்பிக்கை கொள்ளவில்லை.
ஓசிபிசி வங்கியின் கருவூல ஆய்வு, உத்தி பிரிவின் தலைவர் திருவாட்டி செலினா லிங் கூறுகையில், மலேசியாவிலும் வியட்னாமிலும் கணினிச் சில்லு பற்றாக்குறை காரணமாக பல தொழிற்கூடங்கள் மூடப்பட்டுள்ளதாக பல செய்திகள் வருகின்றன," என்றார்.

