ஜூரோங் ஸ்பிரிங் சமூக மன்றத்தில் நேற்று நடைபெற்ற தென்மேற்கு சமூக வேலைக் காட்சியில் வேலை தேடுவோருக்கு உதவிபுரியும் புதிய இணையவாசல் தொடங்கி வைக்கப்பட்டது.
'qood' என்னும் பெயரிலான அந்த இணையவாசல் வேலை தேடுவோருக்கு சுய விவரக் குறிப்புகளைத் தயார் செய்யவும் உதவுகிறது.
மேலும் வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்களும் பட்டியலிடப்பட்டு இருக்கும். இந்தப் புதிய வாசலில் 7,000 வேலைகள் நிரப்புதற்குத் தயாராக உள்ளதாக பட்டியலிடப்பட்டுள்ளன.
400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் அளித்துள்ள வேலைவாய்ப்புகளை அது இணைத்துள்ளது. உணவு, பானத் துறை, விருந்ததோம்பல், பொறியியல் மற்றும் சில்லறை வர்த்தகத் துறை போன்றவற்றைச் சேர்ந்தவர்கள் அந்த நிறுவனங்கள்.
ரிசோர்ட்ஸ் வேர்ல்ட் செந்தோசா, பிசிஎஃப் ஸ்பார்க்ல்டோட்ஸ், ஹான்பாவ்பாவ் மற்றும் சிங்கப்பூர் போஸ்ட் போன்றவையும் அந்தப் பட்டியலில் உள்ளன.
பிஎம்இடி என்ப்படும் நிபுணர்கள், மேலாளர்கள், நிர்வாகிகள் மற்றும் தொழில்நுட்பர்களுக்கான பணியிடங்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
சமூகநலனை மையமாகக் கொண்ட இந்த இணையவாசலை உருவாக்கும் நடவடிக்கை தென்மேற்கு சமூக வளர்ச்சி மன்றம், மேபேங்க் மற்றும் qood அமைப்பு ஆகியவற்றின் கூட்டு முயற்சி.
உள்ளூர் வர்த்தக நிறுவனங்கள் எதிர்நோக்கும் மனிதவளப் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் வேலை தேடும் சிங்கப்பூர் குடியிருப்பாளர்களுக்கு உதவவும் புதிய இணையவாசல் கைகொடுக்கும்.
இந்த இணையவாசலை மூத்த அமைச்சரும் சமூகக் கொள்கைகளுக்கான ஒருங்கிணைப்பு அமைச்சரும் ஜூரோங் குழுத் தொகுதி அடித்தள அமைப்புகளின் ஆலோசகருமான தர்மன் சண்முகரத்னம் தொடங்கி வைத்தார்.
வர்த்தக, தொழில் துணை அமைச்சரும் தென்மேற்கு வட்டார மேயருமான லோ யென் லிங்கும் ஒரு சிறப்பு விருந்தினராக வருகை அளித்தார்.
முன்னதாக, ஜூலை மாதம் சிறிய தொடக்கம் கண்ட இந்த இணையவாசலில், வேலை தேடும் 2,000 பேர் பதிவு செய்துள்ளனர். இந்த இணைய வாசலை நிறுவன முதலாளிகளும் வேலை தேடுவோரும் இலவசமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். வேலை கேட்டு அனுப்பப்பட்ட விண்ணப்பத்திற்கான முடிவை முதலாளிகள் மூன்று வார காலத்தில் அளிக்க இதில் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலைதேடுவோரின் காத்திருப்பு காலம் குறையும்.
வேலை தேடுவோருக்கு பல வசதிகள்

