எதிரிகளின் இலக்கை முன்கூட்டியே கச்சிதமாக கண்டறியும் புதிய வகை கருவிகள் சோதனை

1 mins read
61274e37-979a-47d0-8355-665d8bd71283
15 கிலோ மீட்டர் தூரம் வரை கட்டுப்படுத்தக்கூடிய புதிய வகை வானூர்தியை அமெரிக்க மலைப் பிரதேசத்தில் சோதித்துப் பார்க்கும் சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள். படம்: தற்காப்பு அமைச்சு -

அமெரிக்காவில் பயிற்சியில் ஈடுபட்ட சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் ஆளில்லா சிறிய வகை வானூர்தி ஒன்றை சோதித்துப் பார்த்தனர்.

வெலோஸ் 15 மினி-யுஏவி எனப்படும் அந்த வானூர்தி அதன் பாதுகாப்பு வரம்புக்குள் இயங்குகிறதா என அவர்கள் சோதித்தனர்.

அமெரிக்காவில் ஈராண்டுக்கு ஒருமுறை சிங்கப்பூர் ஆயுதப் படை வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சிங்கப்பூர் குடியரசு ஆகாயப் படையின் 600 வீரர்களும் சிங்கப்பூர் ராணுவத்தைச் சேர்ந்த 200 வீரர்களும் அமெரிக்காவின் இடாஹோ வட்டாரத்திலுள்ள ஹோம் மலைப் பிரதேசத்தில் செப்டம்பர் 14 முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

புதிய வகை வானூர்தியை அதிகபட்சம் 15 கிலோ மீட்டர் வரை தரவுத் தொடர்புடன் பறக்கவிட்டு சோதனை செய்ய முடிந்தது. சிங்கப்பூர் இவ்வாறு செய்ய இயலவில்லை," என்று ஸாம்ஸ் கூ என்னும் சிங்கப்பூர் ஆயுதப் படை அதிகாரி கூறினார்.

அதாவது வானூர்தியை 15 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து கட்டுப்படுத்தும் வகையிலான சோதனையை இந்தப் பயிற்சியின் போது செய்ய முடிந்ததாக அவர் கூறினார்.

வானூர்தியைப் போல ஆயுதங்கள் இருக்கும் இடத்தைக் கண்டறியும் திறன்படைத்த கண்காணிப்புக் கருவி ஒன்றையும் பயிற்சியில் ஈடுபட்ட வீரர்கள் சோதித்தனர்.

எதிரிகளின் ராக்கெட், பீரங்கி போன்றவற்றின் இலக்கை துல்லியமாகக் கண்டறியும் கருவி அது. ஜூன் மாதம் வடிவமைக்கப்பட்ட இக்கருவி இதற்கு முன்னர் இருந்த கருவிகளைவிட அதிகத் திறன்படைத்தது.