லக்கி பிளாசாவில் 2019ஆம் ஆண்டு கார் மோதி இரு பிலிப்பினோ பெண்கள் மாண்ட சம்பவத்தில் வாகனத்தை ஓட்டிய ஆடவருக்கு நேற்று இரண்டு ஆண்டுகள், ஆறு மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சோங் கிம் ஹோ, 66, என்னும் அந்த மலேசியர் பத்து ஆண்டுகளுக்கு எந்தவித வாகனத்தையும் ஓட்டக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டது.
2019 டிசம்பர் 29ஆம் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய குற்றச்சாட்டு ஒன்றை அவர் ஒப்புக்கொண்டார். இதர நான்கு பெண்கள் உயிர்தப்பியதன் தொடர்பில் சுமத்தப்பட்ட ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டிய இரு குற்றச்சாட்டுகளும் நீதிமன்றத்தால் கவனத்தில் கொள்ளப்பட்டன.
அன்றைய தினம் மாலை 4.40 மணிக்கு வார இறுதி விடுமுறைக்காக ஆறு பிலிப்பினோ பெண்கள் ஆர்ச்சர்ட் சாலையில் உள்ள கடைத்தொகுதியின் அருகே நட்மெக் ரோட்டின் நடைபாதை அருகே ஒன்றுகூடினர்.
சிங்கப்பூர் நிரந்தரவாசியான சோங் வாடகை கார் ஓட்டுநர். சம்பவம் நிகழ்வதற்கு சற்று முன்னர் நட்மெக் ரோட்டில் பயணி ஒருவரை இறக்கிவிட்ட பின்னர் ஆர்ச்சர்ட் சாலையில் மற்றொரு பயணிக்கு சேவை செய்வதற்கான அழைப்பை அவர் பெற்றார்.
எனவே உடனடியாக தமது காரை கிளப்பிய அவர், ஜாலான் காயு மானிஸ் சந்திப்பில் 'யு டர்ன்' அனுமதி இல்லாத நிலையிலும் அவர் 'யு டர்ன்' முறையில் காரை திருப்ப முயன்றார்,
அப்போது காரின் பின் சக்கரம் தடுப்பு ஒன்றின் மீது ஏறியது. காரை பின்னோக்கி செலுத்தும் நோக்குடன் பிரேக் விசையை அழுத்துவதற்குப் பதில் 'ஆக்ஸிலரேட்டர்' விசையை அழுத்திவிட்டார்.
அதன் காரணமாக, சாலைத் தடுப்பில் ஏறிய பின்னரும் நிற்காத கார் வேகமாகச் சென்று ஆறு பெண்கள் மீது மோதியது.
அபிகைல் டேனா லெஸ்டே, 40, அர்லின் பிகார் நுகோஸ், 50, என்னும் இரு பெண்கள் சம்பவ இடத்திலேயே மாண்டனர். 37 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பெண்களுக்கு எலும்பு முறிவு உள்ளிட்ட கடுமையான
காயங்கள் ஏற்பட்டன. இவர்களில் ஒருவரான அர்சிலி பிகார் நுகோஸ், மாண்ட 50 வயதுப் பெண்ணின் சகோதரி ஆவார்.
உயிரிழந்த, காயமுற்ற இந்த ஆறு பெண்களும் சிங்கப்பூர் பணிப் பெண்கள்.

