பாலியல் இன்பம் அனுபவிக்கும் நோக்கில் பல பெண் தோழிகளை ஆபாசப் படம் எடுத்த பல்கலைக்கழக மாணவரின் அடையாளத்தை வெளியிட உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. அடையாளத்தை வெளியிட கீழ் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நேற்று தலைமை நீதிபதி சுந்தரேஷ் மேனன் உறுதி செய்தார்.
கோலின் சுவா யி ஜின், 23, என்னும் மாணவர் தம் மீது சுமத்தப்பட்ட ஏழு குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இவற்றுள் ஆறு குற்றச்சாட்டுகள் பெண்களின் மானத்திற்கு இழுக்கு ஏற்படுத்தியது தொடர்பானவை, மற்றொன்று திரைப்படச் சட்டத்தின்கீழ் வகைப்படுத்தப்பட்ட குற்றம் தொடர்பானது.
தமக்குத் தெரிந்த 11 பெண்கள் மற்றும் தெரியாத மற்றொரு பெண் ஆகியோரை இந்த மாணவர் ஆபாசப் படம் எடுத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. பெரும்பாலும் தமது வீட்டில் நடைபெறும் ஒன்றுகூடலுக்கு வந்தபோது பெண்களை இவ்வாறு அவர் படம் எடுத்திருக்கிறார்.
2019 ஆம் ஆண்டு இவர் மீது முதல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட வேளையில் பாதிக்கப்பட்ட பெண்களைக் காக்கும் பொருட்டு மாவட்ட நீதிமன்றம் அடையாளத்தை வெளியிட தடை விதித்திருந்தது. மாணவரின் பெயரையும் பல்கலைக்கழகத்தின் பெயரையும் பாதுகாக்கும் பொருட்டு இந்தத் தடை விதிக்கப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
பாதிக்கப்பட்ட 12 பெண்களில் 10 பேர் இந்த மாணவரின் அடையாளத்தை பொதுமக்களுக்குத் தெரிவிக்கக் கோரியதாக இவ்வாண்டு ஜனவரி மாதம் அரசுத் தரப்பு தெரிவித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து இவ்வாண்டு ஜூலை 29ஆம் தேதி தடையை நீக்குமாறு அரசுத் தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் கோரினார்.

