கொவிட்-19 விரைவுப் பரிசோதனையில் தொற்று இருப்பதாக தெரியவந்தவர்கள் உடல்நிலை நன்றாக இருந்தாலும் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். வீட்டிலிருந்து வேலை பார்க்க வேண்டும்.
வீட்டிலிருந்து வேலை பார்க்க முடியாதவர்களைப் பொறுத்தவரை அவர்களின் முதலாளிகள், அத்தகைய ஊழியர்கள் வேலைக்கு வராத நாட்களைச் சம்பளத்துடன் கூடிய மருத்துவ விடுப்பாகக் கருத வேண்டும் என்று மனிதவள அமைச்சு நேற்று அறிவித்தது.
விரைவுப் பரிசோதனை மூலம் தொற்று இருப்பதாக தெரியவந்துள்ள ஊழியர்கள் வீட்டிலேயே 72 மணி நேரம் தனிமையில் இருக்க வேண்டும். அதற்குப் பிறகு மேலும் ஒரு பரிசோதனைக்கு அவர்கள் உட்பட வேண்டும். கிருமித்தொற்று இல்லை என்பது தெரியவந்தால் அவர்கள் வேலைக்குத் திரும்பலாம்.
தொற்று இருப்பதாக தெரிய வந்தால் தொடர்ந்து அவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும்.
தொற்று இல்லை என்று தெரியவரும் வரை நாள்தோறும் ஒரு முறை அவர்கள் தங்களைப் பரிசோதித்துக் கொள்ளவேண்டும்.
ஒருவருக்குத் தொற்று இருப்பதாக தெரியவந்து, அறிகுறிகள் எதுவும் இல்லை என்றால் அவர், எளிதில் பாதிக்கக்கூடிய அல்லது அதிக ஆபத்துள்ள பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலொழிய, மருந்தகத்திற்குச் சென்று பிசிஆர் பரிசோதனைக்கு உட்பட வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சு தெரிவித்தது.
சிலரைப் பொறுத்தவரை விரைவுப் பரிசோதனையில் தொற்று இருப்பதாக தெரியவந்து, நல்ல உடல்நலத்துடன் இருந்தாலும் அவர்கள் பிசிஆர் பரிசோதனைக்கும் செல்ல வேண்டி இருக்கிறது.
சுகாதாரப் பராமரிப்பு, முதியோர் பராமரிப்பு, பாலர் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளில் வேலை செய்வோர் இவர்களில் அடங்குவர்.
பாலர்பள்ளி, தொடக்கப்பள்ளி சிறார்களுக்கும் இது பொருந்தும்.
போதிய அளவு மருத்துவ விடுப்பு காலத்தைக் கொண்டிராத ஊழியர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் முதலாளிகள் கருணையோடும் நீக்குப்போக்குடனும் நடந்துகொள்ள வேண்டும் என்று அமைச்சு தெரிவித்துள்ளது.

