பருவநிலை மாற்றம் காரணமாக உலகம் வெப்பமடைகிறது. இதனால் கடின பவழப்பாறைகள் போன்ற உயிரினங்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பாறைகள் கடல்வாழ் உயிரினங்களைக் பாதுகாக்க உதவுகின்றன. என்றாலும் இப்போது இந்தப் பவழப்பாறைகளையே பாதுகாக்கவேண்டிய தேவை இருக்கிறது.
தேசிய பூங்கா வாரியம் இதை உணர்ந்து, 10 கடின பவழப்பாறை சிற்றினங்களைத் தன்னுடைய சிற்றின மீட்புச் செயல்திட்டத்தில் சேர்க்க இருக்கிறது. பவளப்பாறைகள் தொடர்ந்து செழித்து பெருகி நிலைத்து இருக்க வழி ஏற்படும்.
செயிண்ட் ஜான் தீவில் பவழப்பாறை நாற்றங்காலில் இவை வளர்க்கப்பட்டு பிறகு சிஸ்டர்ஸ் ஐலண்ட் தீவில் அமைய இருக்கும் கடல் பூங்காவிற்கு மாற்றப்பட்டு வளர்க்கப்படும் என்று நேற்று இந்த வாரியம் தெரிவித்தது. வருடாந்திர உயிரியல் பன்மய விழா நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு இடம்பெற்றது. கடின பவழப்பாறைகளின் மேற்பகுதியில் உயிருடன்கூடிய திசுக்கள் இருக்கும். சுண்ணாம்பு சத்தால் ஆன எலும்புகளும் இருக்கும். இவையே பவழப்பாறைகள் உருவாகக் காரணம்.
இதனிடையே, இத்தகைய கடின பவழப்பாறைகளை பாதுகாக்கும் முயற்சிகளும் பல்வேறு ஆய்வுகளும் சிங்கப்பூரின் பவழப்பாறை வளத்தின் மீட்சித்திறனை மேம்படுத்த உதவும் என்றும் கடல்வாழ் உயிரினங்களுக்கு இதனால் நன்மை ஏற்படும் என்றும் இந்த வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த வாரியம் தன்னுடைய சிற்றின மீட்சி செயல்திட்டத்தில் மூன்று இதர விலங்கினங்களையும் உள்ளடக்கும். இதர 13 தாவர சிற்றினங்களும் அந்தத் திட்டத்தில் சேர்க்கப்படும்.
2030ஆம் ஆண்டு வாக்கில் இந்தத் திட்டத்தில் 100 தாவர சிற்றினங்களையும் 60 விலங்கு சிற்றினங்களையும் உள்ளடக்க வேண்டும் என்பது வாரியத்தின் இலக்கு.