கடந்த ஆண்டிலிருந்து வெளிநாட்டு ஊழியர்களுக்குப் பராமரிப்பு அளித்துவரும் மனிதவள அமைச்சின் பிரிவு ஒன்று நிரந்தரமாக்கப்படும்.
ஏஸ் எனப்படும் 'உத்தரவாதம், பராமரிப்பு மற்றும் ஈடுபாட்டுக்கான' குழு, தற்போதைய கிருமிப்பரவலைக் கடந்து அடுத்து வரக்கூடிய கிருமிப்பரவல்களை பற்றி யோசிக்கவேண்டும் என்று அதன் தலைவர் டுங் யுய் ஃபாய் தெரிவித்தார்.
முதலாளிகள், ஊழியர் விடுதிகளை நடத்துபவர்கள், அரசுசாரா அமைப்புகள் உள்ளிட்ட பங்காளிகளுடன் இணைந்து ஏஸ் குழு பணியாற்றும். ஊழியர்களின் நலனைப் பாதுகாக்கும் சூழலை உருவாக்குவது இந்தக் கூட்டுறவின் நோக்கம்.
இதற்கான ஆட்சேர்ப்பு எண்ணிக்கையை நிதியமைச்சு நிர்ணயித்திருப்பதாக 57 வயது திரு டுங் கூறினார். இந்தப் பிரிவில் அதிகாரிகள் தொடர்ந்து பணியில் இருந்து களத்தில் உறவுகளைக் கட்டிக்காப்பர். நம்பிக்கை மற்றும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த முயற்சி எடுக்கப்படும் என்று அவர் கூறினார்.
சமூகக் கண்காணிப்பின் அணுகுமுறையை இந்தக் குழு கையாளுவதாக கூறிய திரு டுங், வருங்காலத்தில் நிலைமை சீராகும்போது மனிதவள அமைச்சு தொடர்ந்து ஒவ்வொரு விடுதியிலும் இருக்க முடியாது எனக் கூறினார். கடந்த ஏப்ரலில் ஆறு பொதுத்துறை அமைப்புகளைச் சேர்ந்த 2,000க்கும் அதிகமான அதிகாரிகள், தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். அப்போது விடுதிகளில் நாளுக்கு 1,000 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
"நாங்கள் திடுக்கிட்டுப் போனோம்," என்று திரு டுங் தெரிவித்தார்.
ஆயினும் கடந்தாண்டு ஆகஸ்டுக்குள், தங்கும் விடுதிகளில் நிலைமை சீராக உள்ளது. தங்கும் விடுதிகளின் மீள்திறனை அதிகரிக்கும் பணியை ஏஸ் குழு எடுத்துக்கொண்டது. புதிதாக வரும் ஊழியர்களுக்காக நிலையங்களைத் திறந்து அவர்களுக்கு தடுப்பூசி போடும் நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்வது உள்ளிட்டப் பொறுப்புகளை இந்தப் பிரிவு ஏற்றுக்கொண்டது. இது போன்ற நடவடிக்கைகள் அடித்தளமாக அமைவதாகக் கூறும் திரு டுங், இனியும் ஊழியர் விடுதிகள் இதுபோன்ற பிரச்சினைகளால் திடுக்கிட்டுப் போகாது எனத் தெரிவித்தார். ஆரோக்கியம், குடியிருப்பு வசதி, சமூக பலம் ஆகியவற்றின் மீது கவனம் செலுத்தப்படும் என்று திரு டுங் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு, தொடக்கநிலை பராமரிப்பு கட்டமைப்பு உறுதி செய்யப்படும்.

