தடைகாப்பு மாணவருக்கு தேர்வு அனுமதி

தடைகாப்பு மாணவருக்கு தேர்வு அனுமதி

2 mins read
d013c506-4240-45be-9160-3066a4ab69c1
-

கொவிட்-19 தொற்று வராமல் இருக்க தடைகாப்பு உத்தரவின்கீழ் தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்துவரும் மாணவர்கள், விரும்பினால் தேசிய தேர்வு களை எழுதலாம். இருந்தாலும் அவர்கள் சில குறிப்பிட்ட கடுமையான நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டி இருக்கும் என்று கல்வி அமைச்சும் சிங்கப்பூர் தேர்வு மதிப்பீட்டுக் கழகமும் அறிக்கையில் இன்று தெரிவித்தன.

அத்தகைய மாணவர்கள் தனிமை உத்தரவை நிறைவேற்ற தொடங்கும்போது பிசிஆர் பரிசோதனை மூலம் அவர்களுக்குத் தொற்று இல்லை என்பது உறுதி யாக வேண்டும். வீட்டில் ஏஆர்டி பரிசோதனை மூலமும் தொற்று இல்லை என்பது உறுதியாக வேண்டும். ஒவ்வொரு தேர்வையும் எழுதுவதற்கு 24 மணி நேரம் முன்னதாக தொற்று இல்லை என்பது பரிசோதனை மூலம் உறுதியாக வேண்டும்.

தேர்வு இடத்துக்கு தனியார் போக்குவரத்து மூலம் அல்லது நடந்துதான் சென்றுவர வேண்டும். நடுவில் எங்கும் நிறுத்தம் கூடாது. தாங்கள் எழுத விரும்பும் தேர்வுகளைப் பற்றி பள்ளிக்கூடங்களுக்கு அந்த மாணவர்கள் தெரியப்படுத்த வேண்டும்.

அதற்கேற்ப தேர்வு எழுதும் இடங்கள் தயாராகும். இவற்றோடு இதர பல ஏற்பாடுகளும் இடம்பெற்று இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் தடைகாப்பு உத்தரவை நிறைவேற்றும் மாணவர்கள் தனி தேர்வு அறைகளைப் பயன்படுத்த வேண்டும். மாணவர்கள் 3 மீட்டர் இடைவெளியில் அமர்ந்து தேர்வு எழுத வேண்டும்.

அவர்களுக்கென்று தனிப்பட்ட உள், வெளி வழிகள், கழிவறை வசதிகள் இருக்கவேண்டும். மற்றவர்களுக்குத் தேர்வு தொடங்கும் நேரத்தில் இருந்து 30 நிமிடம் கழித்துதான் அவர்களுக்குத் தேர்வு தொடங்கும் என்று அமைச்சு தெரிவித்தது.

இந்த மாற்றங்கள் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு, வழக்க நிலை, சாதாரண நிலை, ஏ-நிலை ஆகிய தேர்வுகளை எழுதுவோருக்குப் பொருந்தும்.

கொவிட்-19 தொற்று இருப்பவர்கள் அல்லது வீட்டிலேயே தங்கி இருக்கவேண்டும் என்ற உத்தரவின்கீழ் இருப்பவர்கள் இந்த ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள். தனிமையில் இருக்கும் தொடக்கப்பள்ளி இறுதித் தேர்வு எழுதும் மாணவருடன் சேர்ந்து அவருடைய குடும்ப உறுப்பினர் அல்லது பராமரிப்பாளர் பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டிய தேவை இருக்குமானால், அப்படிச் செல்வோரும் தனிமை உத்தரவை நிறைவேற்றி வரும் பட்சத்தில், அவரும் மாணவர்களுக்குரிய அதே நிபந்தனைகளுக்கு உட்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் கட்டாய பரிசோதனை காரணமாக அங்கீகரிக்கப்பட்ட விடுப்பில் இருப்போர் அல்லது சுகாதார ஆபத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு இருப்போர் தேர்வு எழுதலாம்.

என்றாலும் அவர்களுக்கான விடுப்பு தொடங்கும் தேதியில் எடுக்கப்படும் பிசிஆர் பரி சோதனை, அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பதைக் காட்ட வேண்டும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ஏஆர்டி விரைவுப் பரிசோதனைகளும் தொற்று இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்ற ஆண்டைப்போலவே இந்த ஆண்டும் தேர்வு எழுத முடியாத மாணவர்கள், செல்லுபடியாகக்கூடிய காரணங்களைத் தாக்கல் செய்தால் சிறப்பு பரிசீலனைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அமைச்சும் கழகமும் தெரிவித்துள்ளன.