விரைவுச்சாலையில் ஏழு வாகனங்கள் விபத்து; 10 பேர் மருத்துவமனையில்

1 mins read
0794787b-236d-456a-bdbf-63cbbafedaea
படங்கள்: XINGAPORE.SG/ஃபேஸ்புக் -

தீவு விரைவுச்சாலையில் திங்கட்கிழமை (செப்டம்பர் 27) காலை நிகழ்ந்த விபத்தில் ஏழு வாகனங்கள் சேதமடைந்தன.

ஒரு கனரக வாகனம், மூன்று லாரிகள், ஒரு மோட்டார் சைக்கிள், இரண்டு கார்கள் ஆகியவை ஒன்றோடு ஒன்று மோதிக்கொண்டன. சாங்கி விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் தீவு விரைவுச்சாலையில் ஜாலான் யூனோசுக்கு வெளியேறும் நுழைவாயிலுக்கு முன்னதாக விபத்து நிகழ்ந்தது.

விபத்தில் சிக்கிய பத்துப் பேர் சாங்கி பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

25 வயது லாரி ஓட்டுநர், 24 வயது மோட்டார் சைக்கிளோட்டி, மூன்று லாரிகளில் பயணம் செய்த எட்டுப் பயணிகள் ஆகியோரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றபோது அவர்கள் சுயநினைவுடன் இருந்ததாக போலிசார் தெரிவித்தனர்.

மருத்துவமனைக்குச் செல்ல மூவர் மறுத்துவிட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை தெரிவித்தது. அவர்களுக்கு இலேசான காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்ததாகவும் சம்பவ இடத்திலேயே அவர்களுக்கு முதலுதவி வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

விபத்து குறித்து போலிசார் விசாரணை நடத்துகின்றனர்.

குறிப்புச் சொற்கள்